
நீட் தேர்வு விவகாரத்தில் தகுந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத்தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மருத்துவ மாணவர்களுக்கான தகுதி நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தும் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மாணவர்களின் எதிர்பார்ப்பை மத்திய அமைச்சரிடம் தெரிவித்து உள்ளோம்.
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இளநிலை படிப்பில் அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே நீட் தேர்வில் விலக்கு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்பில் தமிழகம் பின்பற்றி வரும் இட ஒதுக்கீட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை.
அடுத்ததாக சட்ட அமைச்சகத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.