
குற்றவழக்குகளில் சிக்கியுள்ள டி.டி.வி தினகரனின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என திமுக வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் தினகரன் மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களமே சூடு பிடித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் 127 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், பா.ஜ.க தரப்பில் கங்கை அமரனும், தீபா பேரவை சார்பில் தீபாவும், சமக சார்பில் அந்தோணி சேவியரும் திமுக சார்பில் மருது கணேஷும் உள்ளிட்ட சுயேட்சைகளும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
நேற்று மற்றும் மதுசூதனன், டி.டி.வி.தினகரன், தீபா, சுயேட்சைகள் என 72 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து இதற்கான மனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இந்த மனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் ஆய்வு செய்து வருகிறார்.
காலையில் இருந்து நடைபெற்ற பரிசீலனையில் ஒ.பி.எஸ் தரப்பு மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோரின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா, சமக வேட்பாளர் அந்தோணி சேவியர் உள்ளிட்டோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குற்றப்பிரிவு வழக்குகளில் சசிகலா தரப்பு வேட்பாளர் டி.டி.வி தினகரனின் மனுவை ஏற்கக்கூடாது என திமுக வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.
இதனால் தினகரனின் மனுவை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் கங்கை அமரனின் மனுவை ஏற்றுக்கொண்டதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டி.டி.வி தினகரன் மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.