அன்று தி.க செய்த வேலைக்கு இன்று சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடக்குது.. திருப்பி அடிக்கும் இந்து மக்கள் கட்சி.

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 10:37 AM IST
Highlights

ஆனால் இந்து மக்கள் கட்சி பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தவறு என கண்டிக்கிறது. இதேபோல திராவிடர் கழகமும் இந்து சாமி சிலைகள் அவமதிப்பு செய்யப்படும் போது கண்டிக்க வேண்டும், அதாவது பெரியார் அவர்கள் இந்து மத த்திற்கு எதிராக விநாயகர் சிலைகளை உடைத்திருக்கிறார். 

அன்று  இந்து மதத்துக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் செய்த செயலுக்கு இப்போது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது என இந்து மக்கள் கட்சி பகிரங்கமாக விமர்சித்துள்ளது. கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பின் பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார். 

பகுத்தறிவு பகலவன்  தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசியலில் மையப்புள்ளியாகவும், பேசு பொருளாகவும் இருந்து வருகிறார். பரவலாக எதிர் கருத்து கொண்டவர்களால் அவரது சிலை அவமதிப்பு செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது பல இடங்களில் பெரியார் சிலைகள்  சேதப்படுத்தப்பட்ட அவமதிப்பு சம்பவங்கள் அரங்கேறியது. அப்போது இருந்த போலீசார் இது தொடர்பான விசாரணையில் ஏதோ மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்து விட்டார்கள் எனக்கூறி கடந்து செல்வது வாடிக்கையாக வைத்திருந்தனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் இனி தமிழகத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்வது இருக்காது என்றும், அப்படி செய்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்றும் திமுக மற்றும் திராவிட ஆதரவாளர்கள் கூறிவந்தனர். 

இந்நிலையில் கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை கடந்த 8ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், தலைப்பகுதியில் குங்குமம் வைத்து அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது.  இது பெரியார் ஆதரவாளர்கள்  மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் நள்ளிரவில் இரண்டு பேர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து தெரியவந்தது. அதனடிப்படையில் சிலையை அவமரியாதை செய்த வழக்கில் இந்து முன்னணியை சேர்ந்த அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் பெரியார் சிலை அவமதிப்பு என்பது தொடர்வது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.  தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகளான பின்னரும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவவாதிகள் பெரியாரை கண்டு அஞ்சுகின்றனர்.

அதனால்தான் அவரது சிலைகள் அவமதிப்பு செய்யப்படுகிறது, பெரியார் சிலையை அவமதிப்பு செய்வதால் அதில் பெரியாருக்கு ஒன்றும் அவமரியாதை ஏற்பட்டுவிடாது, அவரின் புகழ் மறைந்துபோகாது, அதேநேரத்தில் அவரது கொள்கை இன்னும் பன்மடங்கு வீரியமாக இளைஞர்களை சென்று சேரும். நள்ளிரவில் யாருமில்லா நேரத்தில், பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்வதுதான் கோழைத்தனத்தின் உச்சம் என விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பான தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி செந்தில், பெரியார் சிலை மட்டுமல்ல எந்த சிலையாக இருந்தாலும் அவமதிப்பு செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் இந்துக் கோவில்களில்  சாமி சிலைகளை அவமரியாதை செய்துள்ளனர். ஆனால் இதுவரை தி.க தலைவர் கி. வீரமணி அதை கண்டித்து பேசவோ, அறிக்கை வெளியிடவோ இல்லை.

ஆனால் இந்து மக்கள் கட்சி பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தவறு என கண்டிக்கிறது. இதேபோல திராவிடர் கழகமும் இந்து சாமி சிலைகள் அவமதிப்பு செய்யப்படும் போது கண்டிக்க வேண்டும், அதாவது பெரியார் அவர்கள் இந்து மதத்திற்கு எதிராக விநாயகர் சிலைகளை உடைத்திருக்கிறார். அவர் நடத்திய போராட்டத்தில் ராமர் உருவப்படம் அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. ஆக இதற்கு விதை போட்டது திராவிடர்கழகம் தான். பெரியார் தான், அன்றைக்கு திராவிடர் கழகம்  செய்தற்கு தற்போது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் தொடர்ந்து இந்து மக்களின் உணர்வுகளையும், இந்து மதத்தையும் இழிவு செய்வதை நிறுத்த வேண்டும், அப்போது மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு நியாயம் கற்பிப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது. 
 

click me!