
குஜராத் மீனவர்களுக்கு பிரச்சனை என்றால் துடிக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை என்றால் மவுனமாக இருக்கிறது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ;- பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கே வருவது இல்லை. அவ்வாறு வந்தாலும் இருக்கைக்கு வருவதில்லை. ஜனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டே ஜனநாயகத்தை நசுக்கும் செயலில் ஈடுபடுகிறார். குஜராத் மீனவர்களுக்கு பிரச்சனை என்றால் துடிக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை என்றால் மவுனமாக இருக்கிறது.
7 தமிழர்கள் விடுதலையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் பாதகமான செயலை மத்திய அரசு செய்கிறது. எனவே, தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்றார்.
மேலும், நாடே போற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயில் நிலம் மீட்பு, தமிழ்த்தாய் வாழ்த்து என திமுகவின் சாதனை பட்டியல் தொடர்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனி அணி அமைப்போம். ஆட்சி அமைப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதில் தவறு எதுவும் இல்லை. தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக கூறுவர்.
ஆனால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல் இருப்பது பெருமையளிக்கக் கூடிய விஷயம் அல்ல. 27 ஆண்டு மதிமுக வரலாற்றில், நான் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்ததுகூட இல்லை என வைகோ தெரிவித்துள்ளார்.