அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு கரம் நீட்டும் செல்லூர் ராஜூ..!

By vinoth kumar  |  First Published Oct 28, 2021, 12:58 PM IST

ஓ.பன்னீர்செல்வம், ஓர் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அண்ணா கற்று கொடுத்த கொள்கை. அதுதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை என்று எடப்பாடியை பெயர் குறிப்பிடாமல் நேரடியாகவே விமர்சித்தார். 


சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதில் தவறு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 20ம் தேதி, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் போது;- சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுவருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி, ‘சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போல....’ என்று பதிலளித்தார். தனக்கு முதல்வர் பதவி அளித்த சசிகலாவை இவ்வளவு கீழ்த்தரமாக எடப்பாடி விமர்சித்ததை அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில்தான் அக்டோபர் 25ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், ஓர் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அண்ணா கற்று கொடுத்த கொள்கை. அதுதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை என்று எடப்பாடியை பெயர் குறிப்பிடாமல் நேரடியாகவே விமர்சித்தார். மேலும், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாத மக்கள் விருப்பம். அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என கூறியது அதிமுகவில்  பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து, ஓபிஎஸ் கருத்து தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா, அவரைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அப்படி வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவரும் கையெழுத்திட்டுள்ளோம். சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் எதிர்த்துத்தான் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார் என கூறியிருந்தார். இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று பாராமல் ஜெயக்குமார் விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேலும், கே.பி.முனுசாமி கூறுகையில்;- சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி கேள்வியே எழவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்து போட்டு அறிவித்திருக்கிறார்கள். எனவே கட்சி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஊடகங்களாகிய நீங்கள் மேலும் மேலும் கமா போடாதீர்கள் என்று  கே.பி. முனுசாமி கூறியிருந்தார். ஆனால், ஓபிஎஸ் கூறியதில் எந்த தவறும் இல்லை என ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;- சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதில் தவறு இல்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஓபிஎஸ் சொன்னார். ஓபிஎஸ் சொன்ன கருத்துகளை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை.  ஓபிஎஸ் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் பிற நிர்வாகிகள் எதிர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றார். ஏற்கனவே சசிகலா, செல்லூர் ராஜூவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைத்ததில்லை. அதேபோல், சசிகலா எதிராக மாவட்ட வாரியாக  தீர்மானம் நிறைவேற்றிய போதும் செல்லூர் ராஜூ அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!