கூலிப்படை கும்பலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.. தேவமணி கொலையில் அன்புமணி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2021, 11:49 AM IST
Highlights

தேவமணி இரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படி ஒரு கொடூரமான வெறிச்செயல் செய்யப்பட்டிருக்கிறது. மிருகங்களை விட மோசமான நபர்கள், மனசாட்சி இல்லாத மிருகங்கள் இப்படி ஒரு கொலையை செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

காரைக்கால் தேவமணி குடும்பத்தினருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் ஆறுதல் கூறினார். கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற புதுவை அரசுக்கு வலியுறுத்திய அவர், கூலிப்படை கும்பலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசம் தெரிவித்தார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேற்று பிற்பகலில் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில், கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் க.தேவமணியின் வீட்டிற்கு சென்றார். அங்கு தேவமணியின் நினைவாக வைக்கப்பட்டிருந்த அவர் பயன்படுத்திய பொருட்களுக்கு அவர் மலர் மரியாதை செலுத்தினார். பின்னர் மறைந்த தேவமணியின் மனைவி, மகன், மகள்கள் ஆகியோரை சந்தித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆறுதல் கூறினார். 

காரைக்கால் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தளபதியாக தேவமணி அவர்கள் திகழ்ந்ததை அவர் நினைவு கூர்ந்தார். ’’கல்வி, திருமணம் என எந்த வகையான உதவி கேட்டு,  யார் வந்தாலும் உதவி செய்தார். மக்களின் பிரச்சினைகளுக்காகவும், மதுக்கடைகளுக்கு எதிராகவும் போராடினார். அவரை கொடியவர்கள் இரக்கமின்றி படுகொலை செய்து விட்டனர். அவரது படுகொலைக்கு நீதி பெற்றுத் தரும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது. உங்களின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்” என்று தேவமணியின் குடும்பத்தினருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணல்:

இதையும் படியுங்கள்: கோயில் நகைகளை உருக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி நிபர்ந்தனை. ஆடிப்போன இந்து அறநிலையத்துறை.

காரைக்கால் தேவமணி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலேயே கட்சியின் அடிமட்டத் தொண்டராக இணைந்து தமது கடுமையான உழைப்பால் மாவட்ட செயலாளராக உயர்ந்துள்ளார். மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்த போராட்டங்கள் அனைத்தையும் வெற்றி கரமாக நடத்தினார்.  108 மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடியுள்ளார். அப்படிப்பட்டவரை கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கிறார்கள்.  இதன் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதாக  செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொலையின் பின்னணியில் காவல்துறையை சேர்ந்த ஒரு சிலர் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த பின்னணியில் உள்ள  அனைவரையும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அண்மையில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் தான் உள்ளனர்.  

தேவமணி இரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படி ஒரு கொடூரமான வெறிச்செயல் செய்யப்பட்டிருக்கிறது. மிருகங்களை விட மோசமான நபர்கள், மனசாட்சி இல்லாத மிருகங்கள் இப்படி ஒரு கொலையை செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். கூலிக்கு படுகொலை செய்யும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இத்தகைய கூலிப்படையினர் மீது புதுவை  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: அந்த கொலைகாரனை லண்டனில் வைத்து கைது செய்யுங்கள்.. பிரித்தானிய அரசின் போலீசுக்கு வைகோ கோரிக்கை. 

தேவமணி படுகொலை தொடர்பாக சரியான முறையில் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும்; தொடர் போராட்டங்களை நடத்தும். தேவமணி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர்  புதுவை ஆளுனர், முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.  அவ்வாறு விசாரணை நடத்தப்படா விட்டால் சிபிஐ விசாரணை கோரி தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கூறினார்கள்.

click me!