பேசும் போதே எனக்கு இவ்வளவு உற்சாகம் பிறக்கிறதே.. உங்களை சந்தித்தால் எவ்வளவு உற்சாகம் பிறக்கும்? ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Oct 28, 2021, 11:26 AM IST
Highlights

அய்யா.... நீங்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. நீங்கள் பார்க்காத துரோகமா? எந்த துரோகத்தாலும் உங்களை வீழ்த்த முடியாது’ என்பதில் தொடங்கி ஒவ்வொரு பாட்டாளியும் ஒவ்வொரு விதமாக என்னை தேற்ற முயன்றனர். 

நீங்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. நீங்கள் பார்க்காத துரோகமா? எந்த துரோகத்தாலும் உங்களை வீழ்த்த முடியாது’ என்பதில் தொடங்கி ஒவ்வொரு பாட்டாளியும் ஒவ்வொரு விதமாக என்னை தேற்ற முயன்றனர் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த மூன்று நாட்களாக என் மனதில் சற்றே நிம்மதி. அதை ’இனம் புரியாத உணர்வு’ என்றெல்லாம் நான் கூற மாட்டேன். ’இனம் புரிந்ததால்’ ஏற்பட்ட உணர்வு... நிம்மதி என்று தான் கூறுவேன்.  கடந்த சில நாட்களுக்கு முன் ‘வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் விழுப்புண்களே!’ என்ற தலைப்பில் முகநூலில் எனது மனதைக் காயப்படுத்திய சில நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருந்தேன். அதை பதிவிடும் போது என் மனம் கனத்திருந்தது. துரோகங்களைப் பற்றி பதிவிடும் போது மனம் வலிப்பது இயல்பு தானே.... அதே போல் தான் எனக்கும் வலித்தது.

எனது மனதில் ஏற்பட்ட வலியை லட்சக்கணக்கான பாட்டாளிகளும் உணர்ந்திருந்தனர் என்பதை அடுத்த சில மணி நேரங்களில் நான் உணர்ந்து கொண்டேன். ஆம்... நான் முகநூலில் பதிவிட்ட சில மணி நேரங்களில் எனது தொலைபேசி நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட விடாமல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அழைத்தவர்கள் அனைவரும் பாட்டாளிகள்.‘அய்யா.... நீங்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. நீங்கள் பார்க்காத துரோகமா? எந்த துரோகத்தாலும் உங்களை வீழ்த்த முடியாது’ என்பதில் தொடங்கி ஒவ்வொரு பாட்டாளியும் ஒவ்வொரு விதமாக என்னை தேற்ற முயன்றனர். 

அய்யா கவலைப்படக்கூடாது என்ற எண்ணமும், உணர்வும் ஒவ்வொருவரிடமும் இருந்ததை அவர்களிடம் பேசிய போது என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரிடமும் பேசி முடித்தவுடன் மனம் இலகுவாகி விடும். இப்போது எனது மனம் பஞ்சு போன்று எந்த சுமையும் இல்லாமல் இருக்கிறது. இதற்குக் காரணம் பாட்டாளிகள் தான். நேற்று காலை கூட இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ஒரு பாட்டாளி என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவரை நான் எப்போதும் செல்லமாக ஒரு பெயர் கொண்டு தான் அழைப்பேன். தொலைபேசி அழைப்பில் அவரை நான்  அடையாளம் கண்டு கொண்டதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  

அய்யா... பல ஆண்டுகளுக்கு முன் நான் தானி ஓட்டிக் கொண்டிருந்தேன். மிகவும் ஏழையாகத் தான் இருந்தேன். ஆனால், இப்போது மிகவும் வசதியாக இருக்கிறேன். அதற்குக் காரணம் அய்யா அவர்கள் தான். எங்களுக்கு அய்யா தான் கடவுள். அய்யாவை நேரில் பார்க்கும் நாள் தான் எங்களுக்கு திருவிழா... தீப ஒளி எல்லாம் அய்யா. நீங்கள் எந்தக் காலத்திலும் கவலைப்படக் கூடாது அய்யா”  என்று மனதில் இருப்பதையெல்லாம் என்னிடம் கொட்டினார். நிலைமை சீரடைந்ததும் அவரையும் மற்றவர்களையும் சந்திக்க வேண்டும் என்பது தானே எனது விருப்பம். அந்த விருப்பம் ஒரு சில வாரங்களில் நிறைவேறி விடும்.

கடந்த சில நாட்களில் என்னிடம் தொலைபேசியில் பேசிய பாட்டாளிகளில் பலர் ‘ அய்யா நீங்கள் துரோகத்தை நினைத்து கவலைப்படலாமா?”’ என்று கேட்டனர். இன்னும் பலர் ’’ நாங்கள் இருக்கும் போது நீங்கள் எப்படி கவலைப்படலாம்?’’ என்று சண்டையிட்டனர். வேறு பலரோ, ’’அய்யா தயவு செய்து துரோகத்தை நினைத்துக் கவலைப்படாதீர்கள் அய்யா” என்று வேண்டினார்கள். அத்தனைக்கும் அர்த்தம் அவர்கள் என் மீது மிகுந்த  அன்பும், பற்றும் வைத்திருக்கிறார்கள் என்பது தான். பாட்டாளிகளின் இந்த அன்பு, பாசம், பற்று, மதிப்பு, மரியாதை ஆகியவற்றுக்கு முன் எந்த துரோகமும் என்னை என்ன செய்து விட முடியும்.

எந்த துரோகமாக இருந்தாலும் அவை பாட்டாளிகளின் அன்புக்கு முன் தூசு தான்.  பாட்டாளிகளுடன் பேசியதிலேயே எனக்கு இவ்வளவு உற்சாகம் பிறக்கிறதே.... அவர்களை சந்தித்தால் இன்னும் எவ்வளவு உற்சாகம் பிறக்கும்? வெகு விரைவில் பாட்டாளிகளை சந்திப்பேன். அதனால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் அவர்களையும் அழைத்துக் கொண்டு நமது இலக்கை நோக்கி வீர நடை போடுவேன். அதன் பயனாக  நாம் வெற்றி இலக்கை விரைவாகவே  அடைவோம்!  மிக்க நன்றி! என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!