திமுகவில் சிறுபான்மையிருக்கு மதிப்பில்லை.. பாஜகவுக்கு சலாம் போடும் அதிமுக.. பொதுக்கூட்டத்தில் திமிறிய ஒவைசி.!

By vinoth kumarFirst Published Mar 13, 2021, 10:23 AM IST
Highlights

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றது என அசாவுதீன் ஒவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றது என அசாவுதீன் ஒவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமமுக கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி;- மாநில அளவில் எங்களுக்கு 3 தொகுதிகளைக் கொடுத்த தினகரன் சஹாபுக்கு நன்றி. உங்கள் அரசியல் பயணத்தில் நீங்கள் எங்கே சென்றாலும் நாங்கள் உங்கள் வலதுகரமாக இருப்போம். ஒரு காலத்தில் தமிழகத்தில் சிறுபான்மை மக்கள், தலித்துகள்,ஆதிவாசிகளுக்கு ஜெயலலிதா எப்படி உரிமையும் சலுகையும் வழங்கினார்களோ அதே நிலை தொடர வேண்டுமென்றால் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக என்பது இப்போது ஜெயலலிதாவின் கட்சி அல்ல. அவர் பாஜகவுக்கு தலைவணங்கியது கிடையாது. இப்போதைய அதிமுக பாஜகவுக்கு சலாம் போடுகிறது.

தேசிய கட்சியான எங்களை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வரும் போது கூட்டணியில் இருந்து காயிதே மில்லத்தின் கனவுகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றன. திமுகவில் சிறுபான்மையின தலைவர்களுக்கே மதிப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, அந்த கூட்டணி வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார்.

மேலும் பேசிய ஒவைசி, ஒன்றரை மாதங்களுக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் என்னை ஹைதராபாத்தில் சந்தித்தார். அவரை நான் மரியாதையோடு வரவேற்றுப் பேசினேன். அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்தார் என்றும் சென்னையில் நடக்கும் அவர்களின் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார். எனக்கு அதே நாளில் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் கூறியதால் அந்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

அதை அவர்களது டிவியிலேயே காட்டினார்கள். ஆனால், இரண்டு மணி நேரத்தில் ஒவைசியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று மாற்றிப் பேசுகிறார்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசிய திமுகவை சிறுபான்மை மக்கள் நம்புவார்களா? உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாரக்ள். அதிகாரத்துக்கு ஒருவேளை அவர்கள் வந்துவிட்டால் சிறுபான்மை மக்களை எப்படி நடத்துவார்கள் என்பதை இஸ்லாமிய மக்களிடம் சிந்திக்க வேண்டுகிறேன் என கூறினார். 

click me!