திமுக வேட்பாளரை எதிர்த்து பிடிவாதம் காட்டினால் உடன்பிறப்பு தகுதி பறிபோயிடும்... தடாலடியாக அறிவித்த ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Mar 13, 2021, 9:13 AM IST
Highlights

பிடிவாதம் பிடிப்பது கழகத்தினரின் இயல்பல்ல.  அப்படிப் பிடிவாதம் பிடித்தால் - நெருக்கடி ஏற்படுத்தினால் அத்தகையோர்  கருணாநிதியின் உடன்பிறப்புகள் எனும் உயர்ந்த தகுதியை இழந்து விடுகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. மேலும் வேட்பாளரை மாற்றி தன்னை அறிவிக்க வேண்டும் என்று இரண்டு முறை விருகம்பாக்கத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த தனசேகரன் பேட்டி அளித்தார். இதனால், திமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஏழாயிரத்துக்கும் அதிகமான உடன்பிறப்புகள் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்திருந்த நிலையில், ஒவ்வொரு தொகுதிக்குமாக நேர்காணல் செய்து, கள நிலவரங்களை ஆய்வுக்குட்படுத்தி, நமது வலிமை - மாற்றார் நிலைமை ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து இந்த வெற்றிப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்ட தி.மு.க. எனும் அரசியல் பேரியக்கத்தில், ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பமனு அளித்திருந்தாலும், கழகம் நேரடியாகப் போட்டியிடுகின்ற தொகுதிகள் 173 என்பதால், ஒரு தொகுதிக்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பையும் கொண்டவனாக உங்களில் ஒருவனான நான் இருக்கிறேன். அந்த நெருக்கடி எத்தகைய தன்மையது என்பதை உடன்பிறப்புகளான நீங்களும் அறிவீர்கள்.
கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தகுதி வாய்ந்தவர்கள்தான். அந்தத் தகுதியின் அடிப்படையில்தான் விருப்பமனு அளித்திருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அழகான எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்வார். வீட்டு பீரோவில் ஏராளமான பட்டுப்புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், விழா ஒன்றிற்குச் செல்லும்போது இல்லத்தரசியார் அவற்றில் ஒன்றை மட்டும்தான் எடுத்து, உடுத்திக் கொண்டு செல்ல முடியும். அடுத்து ஒரு விழாவுக்குச் செல்லும்போது, பீரோவில் உள்ள மற்றொரு பட்டுப்புடவையை உடுத்துகின்ற நல்வாய்ப்பு அமையும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார். எல்லாப் புடவைகளையும் ஒரே நேரத்தில் உடுத்திக் கொள்வது முடியாத காரியம். பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலில் வளர்த்தெடுக்கப்பட்ட உடன்பிறப்புகளில் ஒருவனான நானும் அந்த எடுத்துக்காட்டையே இந்த நேரத்தில் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
கழகம் எனும் பெட்டகத்தில் உள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை - உடுத்துவதற்கு எழில் கூட்டுபவை என்பதில் எந்தச் சந்தேகமும் யாருக்கும் இல்லை. அதில் 173 ஆடைகளை மட்டும் இந்தச் சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான வெற்றிப் பட்டியலுக்குப் பயன்படுத்தியுள்ளேன். இன்னும் ஏராளமான தரமான - தூய்மையான - பயன்தரத்தக்க உடைகள் நிறைந்துள்ளன. நேர்காணல் வாயிலாக அவை என் உள்ளத்தை அலங்கரித்துள்ளன. அடுத்தடுத்து இன்னும் பல களங்களும் வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்போது உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என்ற உறுதியினை வழங்குகிறேன்.
இந்த முறையே உடுத்தியாக வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பது கழகத்தினரின் இயல்பல்ல. “உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை அறிந்திருப்பவர்கள் நீங்கள். அப்படிப் பிடிவாதம் பிடித்தால் - நெருக்கடி ஏற்படுத்தினால் அத்தகையோர் தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகள் எனும் உயர்ந்த தகுதியை பெருமளவு இழந்து விடுகிறார்கள். அவர்களது கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகிவிடும்.
கையளவு உள்ளம், கடல் போல் ஆசை என்பதைப் போல, விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவுதானே! இதனை உணர்ந்து, என் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, களம் நோக்கி கவனம் செலுத்தி, 234 தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டிட, அயர்வின்றிப் பணியாற்றிடப் பாசத்துடன் அழைக்கிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

click me!