
திமுக நிர்வாகி கோ.சு.மணி இல்ல விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், திருமண விழாக்களின் பேசுவதற்கு தடை விதிக்க சபாநாயகர் இங்கு இல்லை என பேசினார்.
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை தியாகராயர் கிழக்கு பகுதி 132வது வட்ட திமுக செயலாளர் கோ.சு.மணியின் இல்லத் திருமண விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் கு.க.செல்வம், ஜெ.அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டமன்றத்தில் அதிக நேரம் பேச முடியவில்லை. இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில் மட்டும்தான் பேச முடிகிறது. காரணம் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டினால் எங்களது பேச்சு உரிமை அங்கு மறுக்கப்படுகிறது.
ஆளுங்கட்சி குறைபாடுகளை சுட்டி காட்டி பேசுவது தான் எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் சபாநாயகர் அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார். இந்த செயலை கண்டித்து தான், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். பின்னர் மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கிறோம்.