
மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது மக்களின் பிரதிபலிப்புத்தான் என்றும் இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் கலா படத்தின் பட பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நடிகை ஈஸ்வரி ராவ், கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல், நானே படேகர், இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படத்தில் விஜய் பேசும்போது, மத்திய அரசுக்கு எதிரான சில கருத்துக்களைக் கூறியுள்ளார். படத்தில் வந்துள்ள இந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவின் கூறி வருகின்றனர்.
மெர்சல் திரைப்படத்தில் விஜய் பேசும் வசனத்தை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறி வருவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது மக்களின் பிரதிபலிப்புதான் என்றும் கூறினார்.
கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்வா முயற்சி வெற்றி பெறாது என்றார். நீலம் அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றும், மாநாட்டில் கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காலா படத்தை வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ரஞ்சித் கூறினார்.