ஜெய்ஹிந்த் முழக்கத்தை சட்டப்பேரவையில் சொல்லி புரிய வைக்க தேவையில்ல.. நயினார் நாகேந்திரன் தனி ரூட்..!

By Asianet TamilFirst Published Jun 29, 2021, 9:32 PM IST
Highlights

ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டப்பேரவையில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்று தமிழக சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரனின் ஜெய்ஹிந்த் தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்திருந்த தமிழக பாஜக  தலைவர் எல்.முருகன், “இனி வரும் காலங்களில் தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத் மாதா கி ஜே ஆகிய கோஷங்களை எழுப்புவோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடைய கருத்துக்கு மாறுபாடான கருத்தை தமிழக சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மெல்லிசை மேடை இசை கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் அதுகுறித்து முதல்வரிடம் எடுத்துரைப்பேன். இதுவரை மத்திய அரசு என்று சொல்லிவிட்டு தற்போது ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். சொல்லுவதில் குற்றமில்லை அவர்களின் பொருளில் குற்றம் உள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் எதுவும் போடவில்லை. இந்த விஷயத்தில் திமுக அரசுதான் மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. நீட் தேர்வு என்பது தற்போதைக்கு முடியும் விவகாரம் இல்லை. நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வுக்கு தற்போது விலக்கு கிடைக்காது என்பது தெரிந்திருந்தும் திமுக அரசு இப்படி சொல்லி வருவதுதான் மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 
ஜெய்ஹிந்த் என்பது நம் நாடு நம் தேசம் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த் என்றால் தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்று பொருள். தனது தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்று சொல்வதில் தயக்கம் என்று சொன்னால், அவர்கள் எந்த நாட்டில் சென்று வாழப் போகிறார்கள்? ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டப்பேரவையில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 

click me!