தமிழ் மொழியின் சிறப்பை பேசினால் போதுமா..? ஆட்சி மொழியாக்க வேண்டாமா..? பிரதமர் மோடிக்கு ஈஸ்வரன் கேள்வி.!

By Asianet TamilFirst Published Jun 29, 2021, 9:12 PM IST
Highlights

தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி மட்டும் பேசினால் போதுமா? தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி சிறப்பு சேர்க்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.  
 

இதுதொடர்பாக  ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி நான் தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி என்றும், தமிழ் மொழி குறித்து மிகவும் பெருமை அடைகிறேன் என்றும் பேசியிருக்கிறார். பிரதமர் மோடி  திருவள்ளுவருக்கு புகழ் சேர்ப்பதையும்,  திருக்குறளை பயன்படுத்துவதையும், தமிழ் மொழியை பற்றி பேசுவதையும் மனதார வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
அதேவேளையில், பெயரளவில் மட்டும் தமிழ் மொழியின் பெருமையை குறிப்பிட்டு பேசி வருகிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. உலகின் தொன்மையான மொழி தமிழ் என இன்னும்  பல்வேறு விஷயங்கள் தமிழ் மொழியினை பற்றி அறிந்து வைத்துள்ள பிரதமர் மோடி தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்நேரம் அறிவித்திருக்க வேண்டும். தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி மட்டும் பேசினால் போதுமா?
தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவித்து தமிழ் மொழிக்கு மென்மேலும் சிறப்பு சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சியை பிரதமர் மோடி செய்திருக்க வேண்டும். தமிழ் மொழியை சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிப்பதில் பிரதமருக்கும், ஒன்றிய அரசுக்கும் தயக்கம் ஏன்?


மலேசியா, மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளில் தமிழை பண்பாட்டு மொழியாக பயன்படுத்தி பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். இந்திய ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. வானளாவிய புகழ்பெற்ற தமிழ் மொழியை பிரதமர் மோடி பேச்சுக்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்திய ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்க முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

click me!