என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஒருபுறம் மக்களை சுரண்டும் என்.எல்.சி நிறுவனம், இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து பாலைவனமாக்குகிறது.
என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஒருபுறம் மக்களை சுரண்டும் என்.எல்.சி நிறுவனம், இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து பாலைவனமாக்குகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். என்.எல்.சிக்கு கடந்த காலங்களில் நிலம் கொடுத்த மக்கள் அனுபவிக்கும் வேதனை, நிலத்தை இழக்க இருப்பவர்களின் அச்சம் ஆகியவற்றின் வெளிப்பாடு தான் இந்த எதிர்ப்பு ஆகும்.
இதையும் படிங்க;- ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்வு! இது ஏழை மக்களை பாதிக்கும்! எதிர்க்கும் அன்புமணி
கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரும், என்.எல்.சி அதிகாரிகளும் கத்தாழை, கரிவெட்டி கிராம மக்களால் திருப்பி அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல... மூன்றாவது முறையாகும். கடந்த காலங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தவறியதையும், வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பை இந்த வகையில் வெளிப்படுத்துகின்றனர். ஏற்கனவே நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடும், வேலையும் வழங்க வேண்டும் என்று கோரும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது; மக்களின் கோரிக்கைகளுக்காக போராடி வருகிறது. நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி முன்வர வேண்டும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், அதன் வளர்ச்சிக்கு காரணமான மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு மாற்றாக அவர்களை சுரண்டி வருவதை மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மூன்றாவது சுரங்கத்திற்காக அடிமாட்டு விலைக்கு வாங்கத் துடிக்கும் , நிலங்களை வழங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்குக் கூட தயாராக இல்லை. அதனால் தான் என்.எல்.சி சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கடலூர் மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறிய நிறுவனமாகத் தான் தொடங்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆண்டுக்கு ரூ.11,000 கோடி வருவாய் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், சராசரியாக ரூ.2000 கோடி லாபம் ஈட்டுகிறது. அறத்தின்படி பார்த்தால், என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமான நிலக்கரி நிறைந்த நிலங்களை வழங்கிய மக்களுக்கு, அதன் லாபத்தில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய என்.எல்.சி, தமிழகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது.
இதையும் படிங்க;- நீங்க கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் சிங்களர்களின் துணிச்சலுக்கு காரணம்! மோடி அரசை இறங்கி அடிக்கும் PMK
கடலூர் மாவட்ட மக்களை என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. பா.ம.க. சார்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி கம்மாபுரத்தை அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில் எனது தலைமையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் இந்தக் கருத்தில் உறுதியாக இருந்தனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4-ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் இதை மீண்டும் தெரிவித்த நான், என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினேன். என்.எல்.சி நிறுவனத்தின் சுரண்டலில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் பா.ம.க. உறுதியாக உள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஒருபுறம் மக்களை சுரண்டும் என்.எல்.சி நிறுவனம், இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து பாலைவனமாக்குகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 8 அடி ஆழத்தில் சுவையான குடிநீர் கிடைத்தது; ஆனால், ராட்சத குழாய்களை அமைத்து நிலத்தடி நீரை என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றி வருவதால் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது.
என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்திற்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய என்.எல்.சி நிறுவனம் இனியும் அங்கு செயல்படத் தேவையில்லை. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்துங்க.. அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி..!