கருத்துகணிப்புகள் மீது நம்பிக்கையே கிடையாது... காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிரடி..!

By Asianet TamilFirst Published Apr 30, 2021, 8:56 PM IST
Highlights

பொதுவாகவே எல்லா கருத்துகணிப்புகளும் ஒரே திசையை நோக்கியே செல்கின்றன. பொதுவாக எங்களுக்கு கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கையில்லை என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
 

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் கருத்துக் கணிப்பையெல்லாம் ஏற்க முடியாது. பொதுவாகவே எல்லா கருத்துகணிப்புகளும் ஒரே திசையை நோக்கியே செல்கின்றன. பொதுவாக எங்களுக்கு கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கையில்லை. என்றாலும், தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அதை வெளியிலிருந்தும் ஹேக் செய்ய முடியாது.
பொதுவாக மத்திய பாஜக அரசு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ, அதை செய்யாது. அரசின் தவறான முடிவுகளால்தான் வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா முதல் அலையில் கால அவகாசம் கொடுத்து ஊரடங்கை முறையாக அறிவிப்பு செய்திருந்தால் பிரச்சினையே வந்திருக்காது.  கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகத்துக்கே இந்திய அரசுதான் உதாரணம் என பெருமை அடித்துக்கொண்டார்கள். பாத்திரத்தை அடிக்கச் சொன்னார்கள், விளக்கை ஏற்றச் சொன்னார்கள்.
தமிழகம் தற்போது பாதிக்காமல் இருந்தாலும், வருங்காலத்தில் பாதிக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டோர் அதிகரித்தால் சமாளிப்பது சிரமமாகிவிடும். கொரோனா பரவலுக்கு தேர்தல் பிரச்சாரம் காரணம் என்றால், அனைத்து கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் கும்பமேளாவும் ஒரு காரணம்தான். மேற்குவங்கத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்ய வசதியாகவே 8 கட்டமாக தேர்தல் நடத்தினார்கள். கொரோனா வேகமாகப் பரவுகிறது என்று தெரிந்தும் 8 கட்டமாக தேர்தல் நடத்தினார்கள்.
நிதியமைச்சர் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் ஒருவரை கூட அந்த உதவிகள் சேரவில்லை. எனவே மத்திய அரசு அறிவிப்பை எல்லாம் நம்ப முடியாது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும் கஜானா குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். ஏனென்றால் அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டது. ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் திறப்பதை தவறு என்று சொல்ல முடியாது. மற்ற நிறுவனங்களின் மூலமாகவும் ஆக்சிஜன் தயாரிப்பை அதிகப்படுத்த வேண்டும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

click me!