
வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்றும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு தாராளமாக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழலை பா.ம.க. ஏற்படுத்தும் என்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும் மிகவும் அவசியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இவ்விசயத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாத நிலவரப்படி 81.18 லட்சம் பேர் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1.40 கோடி பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். ஆனால், 2.5 லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அரசின் லட்சனம் இருதானா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை 49,64,285. அதன் பின் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, வேலை பெற்றோரின் எண்ணிக்கையைக் கழித்தால் வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை. 1.87 கோடியாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், 81.18 லட்சம் பேர் மட்டுமே வேலை வாய்ப்பகங்களில் காத்திருப்பதால், 1.6 லட்சம் பேர் தமிழக அரசால் தங்களுக்கு வேலை வழங்க முடியாது என்ற அவ நம்பிக்கையில் பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்ததற்கு இதைவிட சிறந்த சாட்சியம் தேவையில்லை என்று அதில் கூறியுள்ளார்.
தமிழகத்துக்க வரவேண்டிய முதலீடுகள் அனைத்தும், ஆந்திரம், தெலுங்கான மாநிலத்துக்கு செல்கின்றன. தமிழகத்தில் இயங்கும் என்.எல்.சி., சென்னை பெட்ரோலிய நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், தெற்கு தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வட இந்தியர்களுக்கே வேலை வழங்குகின்றன.
தனியார் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட அளவு பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், அதிமுக அரசுக்கு அதற்கான துணிச்சலோ, செயல்திறனோ கிடையாது.
எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு தாராளமாக வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழலை பாமக ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.