
’ரஜினியின் வருகையால் தி.மு.க.வின் வழியில் எந்த மாற்றமும் நேராது.’ என்று கெத்தாக வெளியில் சொல்லிவிட்டாலும் கூட உள்ளூர நடுங்க துவங்கியுள்ளது அக்கழகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் இயலாமை ஆகியவற்றின் பின் உடனடியான ஒரு எழுச்சி தலைவனாக பார்க்கப்பட்டார் ஸ்டாலின். சூழலுக்கேற்ற காய் நகர்த்தலே அரசியல் சாதுர்யத்தின் அடி நாதம் என்பதை இந்திய அரசியலுக்கே கற்றுக் கொடுத்த கருணாநிதியின் பிள்ளையாயிற்றே, சட்டென்று அதை செய்து முடிப்பார் என்று நம்பினார்கள். குழப்பத்திலிருந்த அ.தி.மு.க. அரசை கவிழ்த்து, ஆட்சியை பிடிப்பார் என்று நினைத்தார்கள்.
ஆனால் ’புறவழியில் தி.மு.க. ஆட்சிக்கு வராது. கழக தலைவர் இதை விரும்பவில்லை.’ என்று கருணாநிதி மீது சுமையை தூக்கி போட்டுவிட்டு இலவு காக்க துவங்கியது தி.மு.க. கிளி.
ஆனால் ஸ்டாலின் கொஞ்சமும் நினைத்திராத வண்ணம் தினகரனின் திடீர் எழுச்சியும், ஆர்.கே.நகரில் அவரது இமாலய வெற்றியும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது தி.மு.க.வுக்கு. நம்புவீர்களோ, இல்லையோ! ’எழுச்சி தலைவன்’ எனும் பட்டத்தை ஸ்டாலினிடமிருந்து சட்டென பறித்திருக்கிறார் தினகரன்.
ஆனால் அதேவேளையில் ஆர்.கே.நகரில் தினகரனை ஜெயிக்கவிட்டதே ஸ்டாலின் தான், தினகரன் ஜெயித்து வந்தால்தான் எடப்பாடியின் ஆட்சியை கவிழ்க்க முடியும்! என்றொரு வாதமும் பக்கவாட்டு சாலையில் பயணித்து ஸ்டாலினின் அரசியல் கெளரவத்தை காத்தது உண்மையே.
ஆனால் எத்தனையோ கூத்துக்களைக் கண்ட 2017-ம் வருடத்தின் கட்டக்கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதியன்று ரஜினி அறிவித்த ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ எனும் வார்த்தை ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.
காரணம்?...பொது தேர்தல் வரையில் வாக்குகள் வகைதொகையில்லாமல் பிரியுமே! எனும் பயம்தான். ஆளும் அ.தி.மு.க. ஆட்சியின் மீது மக்களுக்கு விருப்பமில்லை என்பது பொதுவான வாதம். இந்த நிலை இப்படியே நீடித்தால் இயல்பாக இன்னும் 3 ஆண்டுகளிலோ அல்லது எம்.எல்.ஏ. தினகரன் கொடுக்கும் குடைச்சலில் கூடிய விரைவிலோ ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வரலாம். அப்படியொரு நிலை வருகையில் தி.மு.க.வுக்கு இயல்பாக இருக்கும் வாக்குவங்கி, மெகா கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி, மேலும் அ.தி.மு.க.வை விரும்பாத பொது வாக்கு வங்கியின் பெரும் சதவீதம் ஆகியவற்றை கைப்பற்றி எப்படியாவது அடித்துப்பிடித்து ஆட்சிக்கரையை ஏறிவிடலாம் என நினைத்தார்.
ஆனால் ‘நிச்சயமாய் பொது தேர்தலில் தனிகட்சியாய் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.’ என ரஜினி சொல்லியிருக்கிறது. இதன் மூலம் தி.மு.க.வின் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் பொது வாக்காளராக இருந்த, தி.மு.க.வுக்கு விழக்கூடிய ரஜினி ரசிகர்களின் வாக்குகள் முழுமையாக அதன் கைகளை விட்டுப் போகிறது. மேலும், ஊழலுக்கு எதிரான நிர்வாகம்! எனும் வகையில் ரஜினியை இளம் மற்றும் இதுவரையில் அதிருப்திகளை சந்தித்தே பழகிய வாக்காளர்களும் விரும்புவார்கள்.
ரஜினியின் வருகையை இப்போதே திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்டாட துவங்கிவிட்டனர். தேர்தல் நெருக்கத்தில் ரஜினியின் கை ஓங்கினால் திருமா, வைகோ ஆகியோர் அங்கு சென்றுவிடக்கூட வாய்ப்புள்ளது.
ஆக மிக மிக கடுமையாக வகையில் வாக்குகள் பிரியும். இந்த நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் உருவாகிடலாம், ரஜினி, தினகரன், அ.தி.மு.க., பி.ஜே.பி. என யார் வேண்டுமானாலும் எதிரிலிருந்து எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க முயலலாம்.
ஆக இத்தனை விஷயங்கள் ஸ்டாலினின் மன கண் முன்னே வந்து செல்ல துவங்கியிருக்கிறது நேற்றிலிருந்து! இதை அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் அனைவரும் உணர்ந்துவிட்டனர். இதில் ஒருவர் ‘ரஜினி இப்படி நம்ம தளபதிக்கு வில்லனாயிட்டாரே!’ என்று வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தேவிட்டார்.
என்னாகுமோ! ஏதாகுமோ!