தலைவரின் தளபதி யார்?: துரைமுருகன் இடத்துக்கு தாறுமாறாக அடித்துக் கொள்ளும் தி.மு.க. வி.ஐ.பி.க்கள்!

By thenmozhi gFirst Published Oct 18, 2018, 4:12 PM IST
Highlights

கருணாநிதி தி.மு.க.வின் தலைவராகவும், முதல்வராகவும் விஸ்வரூபமெடுத்த பின் அவரது நிழலாக அன்பழகனோ, மதியழகனோ, நாஞ்சிலாரோ மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளையவர் துரைமுருகன் அந்த இடத்தைப் பிடித்தார். 

கருணாநிதி தி.மு.க.வின் தலைவராகவும், முதல்வராகவும் விஸ்வரூபமெடுத்த பின் அவரது நிழலாக அன்பழகனோ, மதியழகனோ, நாஞ்சிலாரோ மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளையவர் துரைமுருகன் அந்த இடத்தைப் பிடித்தார். 

புத்தி கூர்மை, நினைவாற்றல், புள்ளிவிபர புலி, துறை சார் அறிவு இவை எல்லாவற்றையும் தாண்டி, தன் தலைவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற சூழலை உருவாக்குவதில் துரை  கில்லி. 

அதனால்தான் ஓடிய கருணாநிதி  நடக்க துவங்கிய பிறகும், நடந்தவர் நகர துவங்கிய பின்னும், நகர்ந்தவர் அமர்ந்தே விட்ட பின்னரும், அமர்ந்தவர் படுத்தேவிட்ட பின்னரும் அவரது நிழலாகவே இருந்து எல்லாவற்றிலும் பங்கேற்றார். பெரியார் கை தடி போல் இருந்ததமையால் துரைமுருகன் பெற்ற அதிகாரங்களும், அதன் மூலம் பெருகிய ஆதாயங்களும் அசாதாரணமானவை.  

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தலைமை பதவியை நோக்கி நகர துவங்கியபோது வருத்தம் காட்டிய முகங்களில் முக்கியமானது துரைமுருகனுடையது. ஆனால் கருணாநிதியின் விருப்பமும், சூழ்நிலைகளும் ஸ்டாலினுக்கு அணுசரனையாக இருந்தன. இதனால் தன் எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொண்டவர் எப்படி கருணாநிதியின் நிழலாக  இருந்தாரோ அதேபோல் ஸ்டாலினுக்கும் மாறிப் போனார்.

ஸ்டாலினுக்கு ப்ரமோஷன் வரவேண்டிய நேரங்களில் எல்லாம் அதை முன் மொழிந்தது துரையின் வாய்தான். இதோ தி.மு.க.வின் தலைவராகவும் ஸ்டாலின் படியேறிவிட்டார், துரையும் பக்கத்திலேயே நிற்கிறார். 

நிற்க! கடந்த சில காலமாக துரைமுருகனுக்கு உடல் பெரிதாய் ஒத்துழைப்பதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் கட்சித் தொண்டர் கூட்டத்தினுள் சிக்கி, தலை சுற்றி பெரும் சிரமப்பட்டவர் அதன் பின் மாநாட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சரிசெய்யப்பட்டார். 

இதன் பின் அடிக்கடி துரைக்கு சுகவீனங்கள் வருவதால் அவர் சற்றே பேக் பெஞ்சுக்கு போக வேண்டிய சூழல் வந்திருக்கிறது! அதாவது ஸ்டாலினின் வேகத்துக்கு இணையாக பயணிக்காமல் சற்றே ரிலாக்ஸ்டாக  வரவேண்டிய நிலை எழுந்திருக்கிறது என்கிறார்கள். 

அதேவேளையில் ‘தலைவர் கருணாநிதியோடு பெரும்பாடு பயணித்துவிட்டார். இதோ அடுத்த தலைவர் வந்துவிட்டார், இனி துரையும் விலகி நின்று அடுத்த தலைமுறைக்கு  வழி விட வேண்டும்.’ என்று தொடந்து வலியுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாலேயே துரைமுருகன் சற்றே பின் தங்கி வர பணிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். 

இந்நிலையில், துரைமுருகன் ஸ்டாலினின் நிழலாய் இருக்கும் பொறுப்பிலிருந்து விலகுகிறார் என்றால் அதில் யார் வந்து நிற்பது? என்பதில் பெரும்  ரேஸே நடக்கிறது அறிவாலயத்தில். இந்த ரேஸில் ம.சுப்பிரமணியன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா என்று கணிசமானோர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

இதில் ஸ்டாலினுக்கு யார் மீது நம்பிக்கை? என்பதே கேள்வி. ம.சு.வை பொறுத்தவரையில் சென்னையின் சந்து பொந்துகளை அறிந்தவர். சென்னை மாநகராட்சி தொடர்பான அரசியல், ஆவணங்கள், ஆட்கள் என எல்லாவற்றையும் நக நுனியில் வைத்திருப்பார். ஆனால் அவரை மாநிலமெங்கும் இட்டுச் செல்வது சுகப்படாது என்பது ஸ்டாலினின் முடிவு. 

பொன்முடி அறிவாளி. ஆனால் சற்றே அகம் கூடியவர். இரண்டாம் கட்ட தலைவர்களில் துவங்கி கடைக்கோடி தொண்டன் வரை யாரையும் பொன்முடிக்கு ஆகாது, யாருக்குமே பொன்முடியை பிடிக்காது. எனவே அவரை இப்படி துரையின் இடத்தில் வைப்பதில் ஸ்டாலினுக்கு தயக்கம். 

எ.வ.வேலுவை பொறுத்தவரையில் ஸ்டாலின் வெள்ளி தாம்பழம் கேட்டால் பிளாட்டின தாம்பளம் செய்து அதில் தங்க ஸ்பூன் போட்டு வந்து கொடுப்பார். பணத்தை அள்ளி இறைத்து ஏற்பாடுகள் செய்து ஸ்டாலினுக்கான வரவேற்புகளை அமர்க்களப்படுத்துவார். பெரிய பிஸ்னஸ் மூளை, நட்சத்திர தொடர்புகள் ஏராளம், ஆள் அம்பு சேனைகளை வைத்திருக்கிறார். ஆனால் நுணுக்கமான அரசியல், தேசிய விஷயங்கள் ஆகிய தரவுகள் அவரிடம் குறைவு. மேலும் பரம்பரை தி.மு.க.காரர் இல்லை என்பதும் ஒரு விமர்சனம். 
ஆனால் ஆ.ராசா சரியான தேர்வு, பல அரசியல் அலசல்களுக்கு மிக சரியான தீர்வு என்பதே ஸ்டாலினின் எண்ணம். 

2ஜி வழக்கு விசாரணை நிகழ்ந்த போது ஸ்டாலினிடம் எவ்வளவோ ஒட்ட முயன்றும் ராசாவை சற்று தள்ளியே வைத்திருந்தார் ஸ்டாலின். ஆனால் அதன் வெற்றி தீர்ப்புக்குப் பின் அந்த கண்ணோட்டம் மாறியிருக்கிறது. ஆ.ராசாவை பொறுத்தவரையில் விஷய ஞானம் உடையவர், அறிவாளி, சட்ட நுணுக்கத்துடன் எதையும் அணுகுவார், தேசிய அளவில் அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகளை தெரிந்து வைத்திருப்பவர். 

இதையெல்லாம் தாண்டி விசுவாசி. இப்படியான நபர்தான் ஸ்டாலினுடன் இருக்க வேண்டும் என்பது தலைவரின் குடும்பத்தினரே விரும்பும் விஷயம். ஆனாலும் சில உள் விஷயங்கள் இடிக்கத்தான் செய்கின்றனவாம். 

ஆக எல்லா பெயர்களையும் சீட்டுக் குலுக்கிப் போட்டு யார் தன் நிழல் என்று ஸ்டாலின் முடிவு கட்டப்போகும் நாள் விரைவில் வரும். ஆனால் இவை எல்லாமே வெளிப்படையாக இல்லாமல் போகிற போக்கில் மிக அழுத்தமான மாற்றங்களாய் நிகழும்.

click me!