
என்னை விட வலிமையான பெண் ஆளுநர் இங்கே இருக்க முடியாது என்றும், பெண்கள் என்றால் எதையும் சாதிக்க முடியும் என்றும் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையிலும் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் one among and among us to the people என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது அதில் நக்கீரன் ஆசிரியர் கோபால், துக்ளக் ஆசிரியர் ரமேஷ், புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் மற்றும் ஊடகத் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தெலுங்கானா ஆளுநரும் தமிழிசை சௌந்தரராஜனின் கணவர் சௌந்தரராஜன் புத்தகத்தை வெளியிட்டார். முதல் புத்தகத்தை நக்கீரன்கோபால் பெற்றுக்கொண்டார் மேடையில் இருந்த அனைவரையும் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் கேமராமேன்கள் இங்கு கூடி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உண்மையிலேயே மிகுந்த பாக்கியசாலியாக கருதுகிறேன். நான் எப்போதும் அதிகாரத்தை பயன்படுத்துபவர் அல்ல, அன்பை பயன்படுத்துகிறேன், தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வலம் வந்து இரண்டு மாநிலங்களில் ஆளுனராக இருக்கிறேன். இந்தப் பதவி என்பது அனைவரிடத்திலும் எளிமையாக இருக்க வேண்டும் என்று நான் வரையறுத்துக் கொண்டுள்ளேன். நாம் நம் வேலையை செய்ய வேண்டும் அத்துடன் அனைவரையும் அரவணைத்து செயல்பட வேண்டும். அரசியல்வாதியாக இருக்கும்போது நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன், தற்போதும் என்னை விமர்சிக்கிறார்கள்.
இன்னும் சில இடங்களுக்கு செல்லும் போது நம்மை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மை நோக்கி கொண்டிருக்கிறார்கள். எப்போதும் மக்களோடு மக்களாகவே குடிமக்களின் மனதில் இருக்க கூடிய பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், தெலுங்கானாவில் அந்த முதலமைச்சருடன் இணைந்து பணியாற்றுவது சவாலான காரியம். என் தாய்த் தமிழில் பதவியேற்க வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் முறையையும் தமிழிலேயே உரையாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைவிட வலிமையான பெண் ஆளுநர் எங்கே இருக்க முடியாது, பெண்கள் என்றால் எதையும் சாதிக்க முடியும் என் பலம் என்பது என் உழைப்பும், என் பணியும் தான்.
நான் இரண்டு மாநில முதலமைச்சர்களுடன் பழகிய மற்றும் பணியாற்றும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். அதில் நிறைய அனுபவங்கள் சவால்களை சந்தித்து இருக்கிறேன். எந்த மாநிலங்களில் வேண்டுமானாலும் நான் பணி செய்ய தயாராக உள்ளேன். என் தாய் தமிழகத்திற்கு சேவை செய்வதுதான் என் முதற்கண் ஆசையாக உள்ளது. அழைப்பு என்று ஒன்று வந்தால் அதை அன்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதை அரசியலாக பார்க்காதீர்கள். அதேபோல் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தாலும், அதை செவிசாய்த்து செய்வேன், ஆளுநரின் அழைப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அரசியலில் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கலாம் ஆனால் அனைவரும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்படுவதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம். ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்படாமல் இருப்பதற்கு தெலுங்கானா ஒரு உதாரணம். எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சர்வாதிகாரியாக இருக்கக்கூடாது என்பதுதான். என்னை விட வலிமையான பெண் ஆளுநர் இங்கே இருக்க முடியாது. பெண்ணென்றால் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.