ஜாதியால கெட்டது மட்டுமில்ல, நல்லதும் இருக்கு... அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published May 30, 2022, 9:50 PM IST
Highlights

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதை பொருட்களால் தமிழகத்தில் அதிக அளவில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கினன்றன. பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதனை காவல்துறை இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டும். காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் பலரது உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி கூறும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. தமிழக அரசு இதுவரை என்ன செய்து கொண்டு இருக்கின்றது என்று தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றி தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஜாதியால் அடக்குமுறை என்பது மட்டும் கூடாது, மற்றபடி ஜாதியால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஜாதியால் பல்வேறு பழக்க வழக்கங்கள், திருமண முறைகள், உணவு முறைகள் ஆகியவற்றை கண்டறிய முடியும் சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களது  சமுதாயத்தை வைத்தே அடையாளம் காணமுடியும். உண்மையான எதிர்க்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே செயல்பட்டு வருகிறது. எங்களுடைய நோக்கம் 2026 இல் பாமகவின் ஆட்சி அமைப்பது மட்டுமே. அதற்காக பல்வேறு உத்திகளையும் திட்டங்களையும் பின்பற்றி வெற்றி பெறுவோம்.

பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். அவர்கள் இல்லை என்றால் அன்றாடம் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் அரசுக்கு மற்றும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை பற்றி விமர்சிப்பது தவறு. கடந்த சில நாட்களாக தமிழகத்தில்  திமுகவிற்கு இணையான கட்சி பாஜக என்று சில ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் உண்மையில் தமிழகத்தில் திமுக மட்டுமே பெரிய கட்சி. பாஜக என்பது சிறிய கட்சி. பாஜக வளர்ந்துவரும் கட்சி ஆனால் தேசிய அளவில் மிகப்பெரிய கட்சி. தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்று தெரிவித்தார்.

click me!