நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 10 தொகுதி வரை தருவதற்கு தயார் என பாஜக தெரிவித்துள்ளது. ஆனால் ராஜ்யசபா மற்றும் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் மட்டுமே கூட்டணி என அன்புமணி தெரிவித்துள்ளால் இழுபறி நீடிக்கிறது.
அதிமுக- பாஜக தொடரும் இழுபறி
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளை தொடங்கி விட்டது. தமிழகத்தை பொறுத்தவைர ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் இடங்களையும் அறிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் 4 வருடமாக கூட்டணியில் நீடித்த பாஜக- அதிமுக இடையேயான உறவு முறிந்துள்ள நிலையில், இரு தரப்பும் தனித்தனி அணி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
மதில் மேல் பூனையாக தேமுதிக
அதிமுக- பாஜக புது கூட்டணியை உருவாக்கி வருவதால், இரு தரப்பில் இருந்தும் அழைப்பு வருவதால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது. எந்த கூட்டணியில் அதிக தொகுதி மற்றும் பயன்கள் கிடைக்கிறதோ அந்த கூட்டணிக்கு செல்லலாம் என திட்டமிட்டுள்ளது தற்போது வரை அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், மதில் மேல் பூனையாகவே தேமுதிக உள்ளது.
இதே போல பாமக ஆரம்பத்தில் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அப்போது 7 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கேட்டுள்ளது. இதற்கு அதிமுக தரப்பு 7 மக்களவை தொகுதிக்கு ஓகே சொல்லிவிட்டது. ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளது. தங்கள் கட்சிக்கே ஒரு இடம் தான் கிடைக்கும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாமகவிற்கு செக் வைத்த பாஜக
இதனையடுத்து பாஜக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக தொடங்கியது. அங்கும் ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்போ வட மாவட்டங்கள் உள்ளிட்ட 10 இடங்களை தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் ராஜ்யசபா சீட் வழங்குவது என்பது பாஜகவின் மையக்குழு முடிவு செய்யும் எனவும், மேலும் மத்திய அமைச்சர் பதவிக்கு நீங்கள் மோடியின் குட் புக்கில் இடம்பெறுங்கள் அப்போது பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை சற்று பின்னடைவை சந்தித்தாலும் பாஜக கூட்டணியில் இடம்பெறவே அன்புமணி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்