பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய லாரி.. 13 பேர் சம்பவ இடத்திலேயே பலி. குஜராத்தில் கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2021, 12:36 PM IST
Highlights

இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பணி முடித்து விட்டு அவர்கள் பிளாட்பாரத்தில் ஆயர்ந்து  உறங்கிக் கொண்டிருந்த போது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.  

குஜராத்தில் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் சுமார் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள கொடூர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில்  இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்  கோசம்பாவில் உள்ள கிம்மன்ட்வி என்ற சாலையில் நேற்று இரவு பாலேத்கம் என்ற இடத்தில்  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி ஒன்று உறங்கிக்கொண்டிருந்தவர்களின் மீது  ஏரியது. அதில் சுமார் 13 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்த நிலையில் சுமார் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்தபோது. அங்கு 13 பேர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து  அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் ஆறுமாத குழந்தை ஒன்றும் அந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. இறந்தவர்களின் உடலை பார்த்து அந்தக் குழந்தை கதறி அழுத சத்தத்தை கேட்டபின்னரே அந்த இடத்திற்கு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த துயர சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் வன்ஸ் வாரா மாவட்டத்திலுள்ள குஷல்கர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பணி முடித்து விட்டு அவர்கள் பிளாட்பாரத்தில் ஆயர்ந்து  உறங்கிக் கொண்டிருந்த போது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவரான ராகேஷ் ரூப்சந்து விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அவர் அன்றாடம் கடைக்கு அருகில் உள்ள ஒரு அறையில்  தூங்குவது வழக்கம். ஆனால் நேற்றிரவு அவர்  தனது அறையில் தூங்குவதற்கு பதிலாக நடைபாதை தொழிலாளர்களுடன் உறங்கியுள்ளார். அவர் துரதிர்ஷ்டவசமாக  லாரியேறி உயிரிழந்துள்ளார். கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது மோதிய டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரிவந்துள்ளது. ஒரு இடத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!