அவரது ஈடு இணையற்ற ஈகத்தை போற்றி, பாரத ரத்னா விருது கொடுங்கள்.. மருத்துவர் சாந்தாவுக்காக மன்றாடும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2021, 12:03 PM IST
Highlights

எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியவர், அவருடைய மறைவு மருத்துவ உலகிற்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான மாபெரும் இழப்பாகும். அவரது ஈடு இணையற்ற ஈகத்தையும், மருத்துவ பங்களிப்பையும் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டுமெனவும்.  

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர்  மருத்துவர் சாந்தா அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும் என்பதுடன், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

 சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை குழு உறுப்பினருமான மருத்துவர் சாந்தா அம்மையார் (93) அவர்களின் மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. 

தன்னலம் இல்லா மக்கள் தொண்டராக மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரிய சாந்தா அம்மையார் தனது இறுதி மூச்சு வரையில் புற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் ஆவர். மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் தொடங்கிய அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை இன்று உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையாக உயர்த்திய மாபெரும் சாதனை படைத்தவர். 

எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியவர், அவருடைய மறைவு மருத்துவ உலகிற்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான மாபெரும் இழப்பாகும். அவரது ஈடு இணையற்ற ஈகத்தையும், மருத்துவ பங்களிப்பையும் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டுமெனவும். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அவரை இழந்து வாடுவோருக்கு  எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். 

 

click me!