இந்து அமைப்புகளின் தலையில் விழுந்தது இடி.. தலையிட முடியாது என ஒதுங்கிய உயர்நீதி மன்றம். விநாயகர் ஊர்வலம்?????

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2021, 12:57 PM IST
Highlights


இந்நிலையில் அதை மேற்கோள் காட்டி தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் அதை பின் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. 

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை  வைக்கக்கூடாது என்றும், ஊர்வலம் நடத்தக்கூடாது என்றும் அரசு தடை விதித்துள்ள நிலையில், அதில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம்  மறுப்பு தெரிவித்துள்ளது. விநாயகர் ஊர்வலத்திற்கு அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு பதில் அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி எதிர் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது 3வது அலை விரைவில் ஏற்படக் கூடும் என்ற அச்சம் நிலவி வருவதாகவும், எதிர்வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும், மக்கள் அதிகம் கூடுவதை அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் அதை மேற்கோள் காட்டி தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் அதை பின் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை  ஏற்க முடியாது என பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த இல. கணபதி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், அதை பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மேலும் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கவும், பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், மதுபான கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், அதேபோல் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தது ஐந்து பேரை மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு, மத உரிமைகளை பின்பற்றுவதைவிட வாழ்வாதார உரிமையே முக்கியம் என்றும், பொது நலன் கருதியே அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முடித்து வைத்தது. இதனால் இந்து அமைப்புகள் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறிவந்த நிலையில் அதற்கான கதவுகளை நீதிமன்றம் அடைத்துள்ளது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.
 

click me!