
மத்திய அரசு கொண்டு வந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட விவசாயிகள் நலன் திட்டத்தை தமிழக அரசு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவில்லை எனவும், தமிழக விவசாயிகள் பற்றி ஆளும் கட்சிக்கு சிறிதும் அக்கறை இல்லை எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியில் தமிழக விவசாயிகள் 41 நாட்களாக போராட்டம் நடத்தினர்.
பின்னர், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
இதை மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை குற்றசாட்டுகள் எழுந்தன.
இதனிடையே மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
மத்திய அரசு கொண்டு வந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட விவசாயிகள் நலன் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு சென்று தமிழக அரசு சேர்க்கவில்லை.
தமிழக விவசாயிகள் பற்றி ஆளும் கட்சிக்கு சிறிதும் அக்கறை இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை புதிய அணைகள் கட்டப்பட்டன?.
விவசாயிகள் பற்றி பேச அதிமுகவுக்கு எந்தவித உரிமையும் இல்லை.
காவிரியில் தண்ணீர் இல்லாதபோது மணலை எடுத்து கர்நாடகத்துக்கு விற்பனை செய்தவர்களுக்கு விவசாயிகள் பற்றி பேச அருகதை இல்லை.
மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அமைச்சர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதை நான் வரவேற்கிறேன். மத்திய, மாநில அரசுகளுக்கு இணக்கமான சூழல் இருப்பதே மக்களுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.