மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய்..! செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Mar 20, 2023, 11:55 AM IST

மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை  சட்டபேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதில் பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்த குடும்பத்தலைவிகளுக்கான மாதம் ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

Latest Videos

தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம்.! கிராம சாலையை மேம்படுத்த 2ஆயிரம் கோடி..! தமிழக அரசு அதிரடி

பெண்களுக்கான திட்டங்கள்

இது தொடர்பாக நிதி துறை அமைச்சர் பிடிஆர் கூறுகையில், சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை சரிநிகர் உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து நிலைநாட்டுவதில் எப்போதும் அவர்களது உரிமைகளை எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.

மாதாந்திர உரிமை தொகை

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களை தேடி மருத்துவம் புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

செப்டம்பர் மாதம் உரிமை தொகை

அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில்,

7ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் போன்றவற்றால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும், தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு - சுகாதாரத்துறை அறிவிப்புகள்

click me!