தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சட்டபேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் 1500 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை 2000 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 வழி மேம்பாலம்
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர் தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.5,145 கி.மீ கிராமப்புற சாலைகள் 2000 கோடி ரூபாய்மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் எனவும், சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்வதற்கும், கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.320 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் மையம்
கடல் அரிப்பை தடுக்கவும், மாசுபாட்டை குறைக்கவும், உலக வங்கியின் நிதிஉதவியுடன் 2000 கோடி மதிப்பில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும். நீலகிரி உயிர்கோள் காப்பகத்தை தென்காவிரி காப்பகத்துடன் இணைத்து தந்தை பெரியார் என்று புதிய வனவிலங்கு சரணாயலம் அமைக்கப்படும். பறவைகளின் ஆய்வை அதிகரிக்கவும் மரக்காணத்தில் 25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்