மத்திய அரசு உயர்த்திய பெட்ரோல் விலையை மாநில அரசை குறைக்க கூறுவதா? இது தான் கூட்டாட்சியா..! பி.டி.ஆர் கேள்வி

By Ajmal KhanFirst Published May 22, 2022, 8:34 AM IST
Highlights

எந்த மாநில அரசின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு, மாநில அரசிடம் விலையை குறைக்க கூறுவது தான் கூட்டாட்சியா? என தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்  தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

பெட்ரோல் விலை உயர்வு- பொதுமக்கள் பாதிப்பு

பெட்ரோல் டீசல் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு பல இடங்களில் விலை உயர்வு அதிகரித்தது. குறிப்பாக டீக்கடை முதல் காய்கறி வரை விலையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். தங்களது மாத பட்ஜெட்டில் 2000 ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக செய்வதறியாமல் மக்கள் திகைத்து கொண்டிருந்தனர். 

விலையை அதிரடியாக குறைத்த மத்திய அரசு

இந்தநிலையில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பை ஒரு தரப்பினர் வரவேற்று இருந்தாலும் மற்றொரு தரப்பினரோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்று வந்த பெட்ரோல் விலை தற்போது 110  ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதில் 8 ரூபாய் மட்டும் குறைத்து என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். பெட்ரோல் விலை குறைந்தது 80 ரூபாய்க்கு விற்றால் தான் சாதாரண மக்கள் பயன் அடைய முடியும் என தெரிவித்தனர். 

இது தான் கூட்டாட்சியா?

மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கு கலால் வரியை குறைத்துள்ள நிலையில்  இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதாக தெரிவித்தார். இந்தநிலையில் மத்திய அரசு உயர்த்திய விலையை மாநில அரசை குறைக்க சொல்லி கேட்பது தான் கூட்டாட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் ரூ.23,  டீசல் ரூ.29 என மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளார். உயர்த்தியதில் இருந்து 50% மட்டும் மத்திய அரசு குறைத்து விட்டு மீதியுள்ளதை மாநில அரசை குறைக்க சொல்வதாக பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

click me!