பெரிய தோல்வியை திமுக சந்திக்கும்.. எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜக முயற்சி.. டிடிவிதினகரன் தாறுமாறு கணிப்பு

Published : May 21, 2022, 10:11 PM IST
பெரிய தோல்வியை திமுக சந்திக்கும்..  எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜக முயற்சி.. டிடிவிதினகரன் தாறுமாறு கணிப்பு

சுருக்கம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கைகள் ஹிட்லர் பாணியில் உள்ளன என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவதே இல்லை. பழனிசாமி ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியபோது போராட்டம் நடத்தியவர்தான் ஸ்டாலின். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்த பிறகுதான் சொத்து வரி உயர்வை பற்றி சிந்திப்போம் என்று சொன்னார்கள். ஆனால், முகத்திலிருந்து முகக்கவசத்தை கழற்றியதும் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திவிட்டார். ஸ்டாலின் நடவடிக்கைகள் ஹிட்லர் பாணியில் உள்ளன.

பேரறிவாளன் விடுதலைக்கு திமுகதான் காரணம் என்பது போல் கூறி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் அதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. பழனிசாமி ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களும் போராடி விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால், பெரிய சாதனையாக இதைச் சித்தரிக்கிறார்கள். தனக்காக குரல் கொடுத்தவர்களை எல்லாம் நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவிக்கிறார். அதிலும் திமுக அரசியல் செய்கிறது. தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு வருகிறது. விடியல் ஆட்சியில் இருண்ட தமிழகம் உருவாகி உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். 

ஏழை எளிய மற்றும் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்த அம்மா உணவகங்களை மூடுகிறார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது திமுக. தமிழகத்தில் பாஜகவினர் வந்துவிடுவார்கள் என கூறி சிறுபான்மையினரையும் தமிழக மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் திமுக பெரிய தோல்விகளையும், வீழ்ச்சியையும் நிச்சயம் சந்திக்கும்.

தமிழக மக்களின் சோதனைதான் இந்த ஓராண்டில் திமுகவின் சாதனை ஆகும். தற்போது திமுகவும் அக்கட்சியினரும் செழிப்பாக உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மடியில் கனம் இருப்பதால் வழியில் பயத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது. உக்ரைனில் மருத்துவம் படித்துவந்த மாணவர்களின் கல்வியைத் தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால், சமையல் காஸ் விலை உயர்வு போன்றவை வாக்களித்த மக்களுக்கு கொடுக்கும் பரிசு என்கிற தண்டனையாகும். விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை ஆகும்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருப்பரங்குன்றதில் தடை போட நீங்கள் யார்..? தண்டனை கொடுக்க சிவன் இருக்கிறான்!" வெடித்த தர்மேந்திர பிரதான்..!
நேரு குடும்பத்தில் டும் டும் டும்.. காதலியை கரம் பிடிக்கும் பிரியங்கா காந்தி மகன்.. யார் இந்த அவிவா பெய்க்?