
சசிகலா - தினகரன் இடங்களில் ஐந்து நாட்களாக நடந்த விசாரணையும், அதில் ஆயிரங் கோடிகளில் சொத்துக்கள் வளைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவலும் கூட அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைக்கவில்லை. ஆனால் பூங்குன்றனும் இந்த வருமான வரி ரெய்டு புயலில் சிக்கியிருப்பதுதான் ஆளாளுக்கு அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
தனது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தனக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து பணியாற்ற ஒரு நபரை ஜெயலலிதா தேர்ந்தெடுக்கிறார் என்றால் அதில் லட்சம் முறை யோசித்தே, ஆராய்ந்தே செய்வார். தன் கண் பார்வையில் அவர்கள் இருக்கப்போகிறார்கள் என்பதை தாண்டி அவர்களின் பார்வையில் தான் அடிக்கடி விழுவோமே என்பதுதான் முக்கிய காரணம்.
சசியில் துவங்கி தனது இல்லத்திலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு பூஜை வைக்க வரும் ஐய்யர் வரை முக்கிய நபர்கள் அத்தனை பேரையும் தனது கண்காணிப்பிலேயே தேர்வு செய்வார் ஜெ., பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின் தேர்வாகும் அந்த நபர்கள் நெடுங்காலமாக அந்த பதவியில் இருப்பார்கள்.
அந்த வகையில்தான் தனது உதவியாளராக பூங்குன்றனை தேர்ந்தெடுத்தார் ஜெ., புலவர் சங்கரலிங்கத்தின் மகன் தான் பூங்குன்றன். சாந்தசொரூபி! ஆனால் விஷயஞானம் மிக்கவர். ஜெயலலிதாவின் விழி அசைவை பார்த்தே அவர் என்ன நினைக்கிறார், அவருக்கு என்ன தேவை? என்பதை புரிந்து கரெக்டாக செய்து முடிப்பார். ஜெயலலிதா காலையில் நான்கரை மணிக்கு எழுந்திருக்க வேண்டுமென்று ஷெட்யூல் வைத்தால், நான்கு மணிக்கு பூங்குன்றன் அலாரம் வைத்து எழுந்து உட்காந்திருப்பார்.
ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளுக்கான குறிப்புகளை ப்ரூஃப் பார்த்து சரி செய்து இறுதியில் அம்மாவின் ஒப்புதலுக்கு வைப்பதும் பூங்குன்றன் தான். ஜெயலலிதாவின் கோபம், ஆதங்கம், அன்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம், சிறுபிள்ளைத்தனம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு பல வருடங்கள் அந்த ஆலமரத்தின் கீழே கைகட்டி நின்ற சிறு செடிதான் இவர்.
பல நேரங்களில் பூங்குன்றன் தன்னையும் தாண்டி ஜெயலலிதாவிடம் தகவல்கள் பரிமாறுவதை சசியால் பொறுத்துக் கொள்ள முடியாது. இதனால் சசியிடம் பூங்குன்றன் வாங்கிக் கட்டிய வசவுகள் பல. சசி பூங்குன்றனை தாளித்தெடுப்பதும் ஜெயலலிதாவுக்கு தெரியும். அதனால் பூங்குன்றன் மீது அம்மாவுக்கு தனி பாசமுண்டு.
சில வருடங்களுக்கு முன் சசிகலா உள்ளிட்ட அவரது டீமை ஜெயலலிதா வீசி வெளியில் எறிந்தார் அல்லவா! அப்போது பூங்குன்றனைத்தான் தனது ஆத்மார்த்த தளபதி போல் வீட்டிலும், அலுவலகத்திலும் நிலை நிறுத்தினார். பூங்குன்றனும் துல்லியமாக ஜெயலலிதாவை கவனித்துக் கொண்டார்.
மீண்டும் சசி டீம் உள்ளே நுழைந்ததும் பூங்குன்றன் ஜெயலலிதாவிடமிருந்து பல அடிகள் தள்ளி நிறுத்தப்பட்டார்.
எந்த அமைச்சருக்கு பதவி போகப்போகிறது, யார் புதிய மாவட்ட செயலாளர் ஆகப்போகிறார்கள் என்பது ஜெ, சசிக்கு அடுத்து பூங்குன்றனுக்குதான் தெரியும். பூங்குன்றனிடம் இருந்து போன் வருகிறது என்றாலே அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் அலறி துடித்துதான் அட்டெண்ட் செய்வார்கள். எப்போதுமே ‘ஒண்ணுமில்ல’ என்ற வார்த்தையுடன் பேச்சை துவக்குவார் பூங்குன்றன். அது நல்ல விஷயமோ அல்லது நெககடீவ் விஷயமோ இதுதான் அவரது ஹேப்பிட்.
ஜெயலலிதாவுக்கு பூங்குன்றனை பிடித்துப் போக முக்கியமான காரணங்களில் ஒன்று மிக செழுமையாக சம்பாதிக்கும் இடத்தில் இருந்து கொண்டும் பூங்குன்றன் எளிமையாக இருந்தார் என்று கருதியதால்தான்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பூங்குன்றன் ஜனரஞ்சக கண்களில் சிக்காமல்தான் இருந்தார். அப்பேர்ப்பட்ட பூங்குன்றன் வீட்டிலும் இன்று ரெய்டு. சுமார் 8 மணி நேரம் அவரை விசாரித்திருக்கிறது ஐ.டி. துறை என்கிறார்கள்.
பூங்குன்றனிடமிருந்து 350 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள், பணம் வளைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் பரவுகிறது. அது எந்தளவுக்கு உண்மையோ அல்லது அது முற்றிலும் பொய்யோ அல்லது உண்மை அதைவிட அதிகமானதோ என்று எதுவும் தெரியவில்லை. நெடுங்காலமாக ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்ததால் சசி, தினகரன் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள், சொத்து விபரங்களை பற்றி பூங்குன்றன் தெரிந்து வைத்திருப்பார் எனும் ரீதியில் கூட அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களை வாங்கியிருக்கலாம். அல்லது பூங்குன்றனை மிரட்டி அவர் மீது கூட சிலர் பல கோடிகளை ஏற்றி வைத்து தங்கள் சுமையை குறைத்திருக்கலாம்! எது உண்மை என்பது கூடிய விரைவில் விளங்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அதற்குள் சிலர் பூங்குன்றனை நோக்கி...’யூ டூ பூங்குன்றன்?’ என்று கேளிவிக்குறியோடு சந்தேகக்குறியையும் இடுவதுதான் வருத்தமே!