சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை எவ்வாறு குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியும் ? அனுப்ப முடியாதே ?என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு கடந்த 28 ஆம் தேதி ஆளுநர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்த வாதிடும் போது, இந்த விவகாரத்தில் அரசியல் சாசனம் 200 வழங்கியுள்ள அதிகாரத்தின்படி ஆளுநர் நிறுத்தி வைக்கலாம், குடியரசு தலைவருக்கு அனுப்பலாம், திரும்ப அனுப்பலாம் அந்த வகையில் தற்போது மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பாக கூறுகையில், ஏற்கனவே உச்சநீதிமன்றம் பஞ்சாப் விவகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. ஒரு மசோதா திரும்ப அனுப்பப்பட்டால், அதனை சட்டமன்றத்தில் மறுபடியும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் இங்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
இதற்கு தலைமை நீதிபதி கூறுகையில், சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை எவ்வாறு குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியும் ? அனுப்ப முடியாதே ? முதன் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசு தலைவருக்கு அனுப்பிருக்கலாம் , ஆனால் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி விட்டு, அது மறு நிறைவேற்றம் செய்த பின்னர் அந்த மசோதாவை எவ்வாறு குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியும் ? இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருக்கு முட்டுகட்டையை ஆளுநர் தரப்புதான் தீர்க்க வேண்டும் என விரும்புகிறோம்
நாங்கள் ஒரு அரசியல் சாசன பதவியில் உள்ளவரை கையாளுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். அரசியல் சாசன பிரிவு 200 கீழ் உள்ள மூன்றில் ஒரு option - யை ஆளுநர் நடவடிக்கையாக மேற்க்கொண்டிருக்க வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க (kill the bill) செய்யவோ முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் உரிய முடிவை எடுக்க வேண்டும். மூன்று முடிவுகள் எடுக்கத்தான் அவரும் அரசியல் சாசனம் உரிமை வழங்கி உள்ளது .
இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசியல் சாசனம் அடிப்படையில் ஆளுநருக்கு, மசோதாவை வைத்திருக்க நான்காவதாக அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். இதற்கு தலைமை நீதிபதி தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பது உங்கள் கருத்து?அவ்வாறு பேசினால் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் முதல்வரை நேரில் அழைத்து பேச வேண்டும் என தெரிவித்த நீதிபதி இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.