பொதுக்குழுவில் மட்டுமல்ல போஸ்டரிலும் இருக்க கூடாது..! ஓபிஎஸ் பெயருக்கு வெள்ளை அடித்த இபிஎஸ் டீம்

By Ajmal KhanFirst Published Jun 24, 2022, 5:11 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயருக்கு வெள்ளை அடித்து மறைக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு கடந்த 5 வருடங்களாக தொடர் போட்டிகள் ஏற்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலைக்குறைவால் உயிர் இழந்தார்.இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்றார். தொடர்ந்து முதலமைச்சர் பதவியையும் தான் ஏற்க வேண்டும் என்ற காரணத்தால் ஓபிஎஸ்சை பதவி விலக சசிகலா கூறினார். இதனால் ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டு தனி அணியாக செயல்பட்டார். தொடர்ந்து சில நாட்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிறைக்கு சென்றார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து சசிகலாவை ஒதுக்கிய இபிஎஸ் அணி,  ஓபிஎஸ் அணியுடன் இணைந்து  4 வருடம் காலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. உள்ளுக்குள் பதவிக்காக பகை இருந்தாலும் ஒருவருக்கொருவர் நட்போடு பழகியாத வெளியில் காட்டிக்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆவேசம் அடைந்த சி.வி.சண்முகம்

இந்தநிலையில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என அடுத்தடுத்து தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியதால் இதற்க்கு இரட்டை தலைமை தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. ஒற்றை தலைமை இருந்தால் தான் விரைந்து முடிவெடுக்க முடியும்  கட்சியை வளர்க்க முடியும் என கூறப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீரென பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் நிராகரிப்பதாக தெரிவித்துவிட்டு, . ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்தை நேற்று பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதி ஆகிவிட்டதாகவும் இபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.  

திமுக சந்தோஷப்பட வேண்டாம்! உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்- சிவி.சண்முகம்

ஓபிஎஸ் பெயரை மறைத்த அதிமுகவினர்

மேலும் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஆரம்பம் முதலே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆக்ரோஷமாக காணப்பட்டார். பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும், 23 தீர்மானங்களும் நிராகரிக்கிறோம், நிராகரிக்கிறோம் என கூறி பொதுக்குழு உறுப்பினர்களையும் ஆவேசமடைய செய்தார். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் படங்கள் மற்றும் பெயர்களுக்கு சுன்னாம்பு அடித்தும் முகத்தை மறைத்து வருகின்றனர். இதே போல சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓபிஎஸ் உருவப்படத்தை  மறைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.எதிர்கட்சியாக உள்ள நிலையில் அரசுக்கு எதிராக போராடாமல் உட்கட்சி பிரச்சனைக்காக அதிமுக தலைமை நிர்வாகிகள் போராடி வருவது  அதிமுக தொண்டர்களை வேதனை அடையவைத்துள்ளதாக கூறப்படுகிறது

இதையும் படியுங்கள்

அனைத்து பதவிகளும் ரத்து என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் ரத்து தானே?- வைத்தியலிங்கம் கேள்வி

click me!