அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.. அது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும்.. எகிறிய வளர்மதி.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 4:48 PM IST
Highlights

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
 

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு பாதியில் கலைந்ததை அடுத்து பலரும் பல வகைகளில் விமர்சித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது, ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது கட்சி இரண்டாக நிற்கிறது. மீண்டும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூடும் என இபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர். ஆனால் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இப்படி கட்சியே களேபரபட்டு நிற்கும் நிலையில், இபிஎஸ் ஆதரவாளர் வளர்மதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதித்த பிறகுதான் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொதுக்குழுவை நடத்த கூடாது என அதிமுகவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடுத்தனர். இதேபோல் தேர்தல் ஆணையத்திடம் இன்று முறையிட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நாள் முதல் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு பதியப்பட்டு வருகிறது.

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார். அப்போது திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என ஸ்டாலின் பேசியிருக்கிறார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது அவருக்கே தெரியும்.. எம்ஜிஆர் கண்ட அதிமுக என்ற இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது, அது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் என்றார். ஓ.பன்னீர் செல்வத்தை யாரோ பின்னிருந்து இயக்குகிறார்களா என்ற கேள்விக்கு,

அதை ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என கூறிய அவர், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தையும் நீதி அரசர்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெற்றுத்தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால் பொதுக்குழு தீர்மானத்தில் இல்லாத ஒன்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று ஓபிஎஸ் தான் கூறுகிறார். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
 

click me!