பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து... அமைச்சர் சி.வி.கணேசன் போட்ட அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jun 24, 2022, 5:05 PM IST
Highlights

உரிய பாதுகாப்பு இல்லாத இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார். 

உரிய பாதுகாப்பு இல்லாத இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார். கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் ஒருவர் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனிடையே கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

அதனைத் தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் கிராமங்களுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவார்களின் குடும்பத்திற்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளேன். பட்டாசு உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்கள் அரசின் முழு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக இதுபோன்று பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்ற இடங்களில் பட்டாசு உற்பத்தி செய்கின்ற  உற்பத்தியாளர்கள், நிறுவனங்கள் மீது அந்த கடைகளின் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வருகின்ற தீபாவளிக்கு நேரத்தில் அதிகமான அளவு பட்டாசு உற்பத்தி செய்யப்படும். தமிழ்நாட்டில், குறிப்பாக விருதுநகர் மாவட்டம் மற்றும் உற்பத்தி செய்யும் பிற இடங்களிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் சென்று முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க  உத்தரவிட்டுள்ளோம்.  முழுமையாக பாதுகாப்பு இல்லாத இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!