இலங்கை அரசு உடனே இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: கண்கள் சிவந்து, ரத்தம் கொதித்த அமைச்சர் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2020, 11:22 AM IST
Highlights

இந்த தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இது தொடர்பாக வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி அளித்து வருகிறோம். முதலமைச்சரால் திறக்கப்பட்ட நவீன மீன் பிடி அங்காடி அம்மாவின் ஆட்சி காலத்தில் நூறு கோடி அளவுக்கு பணிகள் நடைபெற்றது. இடநெருக்கடி காரணமாக திருவெற்றியூரில் 250 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். 

திமுக ஆட்சிக்காலத்தில் மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்குவார்கள், ஆனால் தற்போது கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கி பணிகள் நடைபெறுகிறது. மீனவர்களுக்கு எந்த அளவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வரும், சென்னை துறைமுகத்தில் மீன் ஏலம் விடுபவர்கள் கடந்த காலங்களில் மழை நீரில் நனைந்து கடல்நீரில் கால்களை வைப்பதனால் அவளுடைய கால்களில் புண் ஏற்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால் தற்போது முதலமைச்சர் திறந்து வைத்த புதிய மீன்பிடி துறைமுகம் நவீன வசதிகளுடன் வெளிநாடுகளில் இருப்பதைப் போன்ற நிலையை ஏற்படுத்தி தந்துள்ளோம். 

தொடர்ந்து இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்கள் காயம் அடைந்துள்ளது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து ஏற்கனவே கண்டனத்தை தெரிவித்துள்ளோம். இந்த தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இது தொடர்பாக வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. நம்முடைய மீனவர்கள் வேண்டுமென்றே திசைமாறி செல்வது கிடையாது, காற்றின் வேகம் அலையில் நீரோட்டம் காரணமாக இது நிகழ்கிறது. இதுபோன்ற சமயங்களில் இந்திய கடற்படையிடம் அவர்களை ஒப்படைப்பதே நியாயமானதாக இருக்கும். ஆனால் அவர்களின் மீது தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

 

click me!