சூர்யா சிவாவைத் தொடர்ந்து பாஜகவில் இணையபோகும் திமுக மாஜி அமைச்சர் மகன்.. வெளியான பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2022, 2:17 PM IST
Highlights

திமுக என்ற கட்சி கனிமொழி சபரீசன் உதயநிதி என்ற முக்கோணத்தில் சிக்கி தவிக்கிறது என சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா விமர்சித்துள்ளார். 

திமுக என்ற கட்சி கனிமொழி சபரீசன் உதயநிதி என்ற முக்கோணத்தில் சிக்கி தவிக்கிறது என சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா விமர்சித்துள்ளார். இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஓராண்டில் செய்த சாதனையை திமுகவினர் பொதுக்கூட்டங்களில் மூலம் விளக்கி வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் முக்கிய எம்.பியும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்துள்ளார். இது திமுகவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில்தான் பாஜகவின் தான் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதேபோல் திமுகவின் நிலைமை குறித்தும்  அவர் தன் பேட்டியில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பணியாற்றிவருகிறேன், கடினமாக உழைத்திருக்கிறேன், ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் உடனுக்குடன் உயர்ந்த பதவிகள் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எனது தந்தையின் சார்பில் இருந்து எனக்கு எந்த உதவியும் இல்லை, எனவே கனிமொழியின் ஆதரவாளராக இருந்தால் காட்சியில் முன்னேறலாம் என அவருடன் இருந்து வந்தேன். ஆனால் அவரையே தற்போதைய ஓரங்கட்டும் படலம் கட்சிக்குள் நடந்து வருகிறது. இதனால் வெறுத்துப் போய் பாஜகவில் சேர்ந்து இருக்கிறேன். திமுகவின் அதிகார மையமாக இப்போது உதயநிதி, சபரீசன் மட்டுமே உருவாகி இருக்கின்றனர். அதேபோல் திமுக என்ற கட்சி கனிமொழி, உதயநிதி, சபரீசன்  என்ற முக்கோணத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

அதனால் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கனிமொழி ஓர் அணியாகவும், சபரீசன் தனி அணியாகவும், அன்பில் மகேஷ் உடன் சேர்ந்து கொண்டு உதயநிதி ஒரு அணியாகவும் கட்சியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திமுக என்ற கட்சியே இப்போது இந்த முக்கோணத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் தவித்து வருகிறார். ஒரு கட்சிக்கான தோல்வி என்பது வாக்காளர்களால் மட்டுமல்ல கட்சியில் உள்ள நிர்வாகிகளின் நடவடிக்கைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. தேமுதிக அதிமுக போன்ற கட்சிகளின் அழிவுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மீதான அதிருப்தியே  காரணம். அந்த நிலைமை தற்போது திமுகவில் உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. அதேபோல் அவர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாக இருக்கிறது.

பொள்ளாச்சி வழக்கை கண்டு எவ்வளவு கொதித்தார்கள், ஆனால் திமுகவில் உள்ள பாலியல் புகாரை அவர்கள் கண்டுகொள்ளவில்லையே, திருச்சி சிவா, பெரியகருப்பன் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் புகார்கள் ஆதாரத்தோடு வெளியானது. ஆனால் அதற்கு பிறகும் அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.  ஆனால் பாஜகவின் பாலியல் புகாருக்கு உள்ளான அவர்களுக்கு பதவிகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் டம்மி ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் கட்சியில் செயல்படாதவர்களை நீக்கி உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டதால் என்னிடம் பேசுவதையே என் தந்தையார் நிறுத்திவிட்டார். திராவிடமும் மதச்சார்பின்மையும் பேசும் எனது  தந்தையால் நான் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி அவர் இரட்டை வேடம் போடுகிறார்.

கடந்த சில மாதங்களாகவே நான் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது, இதைக்கேட்ட பாஜகவினர் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள், அதை ஏற்று காட்சியில் சேர்ந்திருக்கிறேன். நான் திருச்சி சிவாவின் மகன் என்ற அடையாளத்தையே அழித்துவிட்டேன், நான் பாஜகவுக்கு சென்றிருப்பதை கேள்விப்பட்டு திமுக முன்னாள் வனத்துறை அமைச்சர் திருச்சி செல்வராஜ்யின் மகன் கருணைராஜா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்றார். முதலில் நான் செல்கிறேன் பிறகு உன்னை அழைத்து செல்கிறேன் என்று சொன்னேன். திமுகவில் இருந்து பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். இனி தமிழ்நாட்டில் பாஜக தான் நிற்கும், திமுகவின் அரசியல் அஸ்தமனம் தொடங்கிவிட்டது இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!