இலங்கை நிலைமை இந்தியாவிலும் வரக் கூடாது.. ஜி.எஸ்.டி. வரியை ரத்து பண்ணுங்க.. விஜயகாந்த் எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Jul 21, 2022, 10:39 PM IST
Highlights

உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சில உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை 2 முதல் 3 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. மேலும் பத்தாயிரம் வாடகை உள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதமும், சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு 5 முதல் 12 சதவீதமும், எல்இடி பல்புகளுக்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமும் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரவாதிகளின் பிடியில் தமிழ்நாடு.. ஆளுநர் மாளிகையில் அலறிய பாஜக கே.பி ராமலிங்கம்.

மருத்துவமனை அறை வாடகை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் விவசாய கருவிகள் எனப் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி உயர்த்தியிருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும். அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்காமல் மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய- மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதையும் படிங்க: திரும்பவும் முதல்ல இருந்து... சீரழிந்த சிஸ்டத்தை சரி செய்ய மீண்டும் அரசியலுக்குள் புகுந்தார் தமிழருவி மணியன்!

உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், மின்கட்டணம், வீட்டு வாடகை என நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்படும் என மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அந்த நிலை இந்தியாவில் ஏற்படாமல் இருக்க விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதோடு, உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியையும் ரத்து செய்ய வேண்டும்” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 2024 தேர்தலில் எல்லா தொகுதிகளும் அதிமுகவுக்குதான் .. எதிர்காலத்தில் இபிஎஸ்தான் முதல்வர்.. தங்கமணி தாறுமாறு!

click me!