
மத்திய அரசுக்கு அடிபணிந்து மண்டியிட்டுக் கொண்டிருக்கிற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் பரபரவென காலில் சக்கரம் கட்டிக் கொண்டது போல சுழன்று கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக வேலூரில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஸ்டாலின் இன்று காலை வேட்டியை மடித்துக் கொண்டு குளத்தை தூர் வாரும் பணியில் தன்னை ஈடுபடுத்தி திமுக தொண்டர்களை மட்டும் அன்றி வெகுஜன மக்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எல்லையம்மன் கோயில் குளத்தை தூர்வாரிய பின் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளை காக்க பொதுமக்களின் ஒத்துழைப்போடு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தூர்வாரும் பணியில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அதிமுகவின் இரு அணிகளையும் விமர்சிக்கத் தயங்கவில்லை.
ஆட்சியை எப்படிக் காப்பாற்றுவது..! அடித்துக் கொண்டிருக்கிற கொள்ளையை தொடர்ந்து எப்படிச் செய்வது என்பதிலேயே அரசு கவலை கொண்டிருப்பதாகவும், மத்திய அரசுக்கு அடிபணிந்து மண்டியிட்டுக் கொண்டிருக்கிற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மீது ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.....