தமிழகத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் நாசர் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அமைச்சராக டிஆர் பாலுவின் மகனான டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம்
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது. திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. முன்னாள் அமைச்சர் தமிழரசி, டாக்டர் எழிலன், டிஆர்பி ராஜா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என தகவல் வெளியானது. ஆனால் நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட புதிய அமைச்சர் பட்டியலில் டிஆர்பி ராஜா மட்டும் இடம்பெற்றுள்ளார். அதே போல பால்வளத்துறையில் அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டுள்ளார்.
நாசர் நீக்கப்பட்டது ஏன்.?
புதிய அமைச்சராக பதவியேற்க உள்ள டிஆர்பி ராஜா, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகனாவார். இவர் மன்னார்குடி தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். மேலும் இவர் திமுக ஐடி பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில் 2 ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாசர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மா.பா. பாண்டியராஜனை தோற்கடித்தார். இதனையடுத்து திமுக அரசு பதவியேற்ற போது பால்வளத்துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார்.
சர்ச்சையில் சிக்கிய நாசர்
நாசர் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக அதிகாரிகளை மிரட்டுவது, கல்லை கொண்டு எரிவது போன்ற செயல்கள் சமூகவலைதளத்தில் பரவியது அனைத்து தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பால் வளத்துறை சரியாக கவனிக்காத காரணத்தால் கொள்முதல் பிரச்சனை,விநியோக பிரச்சனை என பல கோடி ரூபாய் ஆவினுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தான் இதற்கு காரணம் என்றால் அதற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் நாசர் தான் பொறுப்பாகும் என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆவின் சார்பாக பெட்ரோல் பங்குகள் தொடங்கப்பட்டதாகவும் அது தனது மகன் பெயரில் அனுமதி வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெண்ணெய்,பட்டர் போன்றவை மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாங்கப்படுவதாகவும், அதிலும் முறைகேடு நடைபெறுவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
.T.R.B.Rajaa: 3 முறை எம்.எல்.ஏ.. திமுக ஐடி விங்கின் ‘மாஸ்டர் மைண்ட்’ - யார் இந்த டி.ஆர்.பி ராஜா?