திரையுலகின் தலித் அடையாளம் யார்? கோபி நயினார் – ரஞ்சித் மோதலின் பின்னணி!

By sathish kFirst Published Nov 15, 2018, 10:52 AM IST
Highlights

 திரைப்படம் ஒன்று எடுக்கும் விவகாரத்தில் பிரபல இயக்குனர் ரஞ்சித் – அறம் இயக்குனர் கோபி நயினார் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கார்த்தியை வைத்து ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் தனது கருப்பர் நகரம் படத்தின் கதை என்று கோபி நயினார் போர்க்கொடி எழுப்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதன் பிறகு இருவருக்கும் இடையே பஞ்சாயத்து பேசப்பட்டு செட்டில்மென்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பிறகு ரஞ்சித் கபாலி, காலா என வேறு உச்சத்திற்கு சென்றுவிட்டார். இதே போல் மெட்ராஸ் படத்தின் கதைக்கு உரிமை கோரிய கோபி நயினாரும் அறம் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.


 
   காலா படத்திற்கு பிறகு இந்தியில் திரைப்படம் இயக்க உள்ளதாக ரஞ்சித் அறிவித்தார்.  உண்மை கதையை மையமாக வைத்து ரஞ்சித் இயக்க உள்ள படத்தை நமா பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. உண்மைக் கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க உள்ளதாக கூறிய ரஞ்சித் தனது படத்திற்கான ஸ்க்ரிப்ட் தயாரிப்பு வேலையில் பிசியாக இருந்தார். இதே போன்று ரஞ்சித்தின் இந்தி படத்தில் நடிக்க அக்சய் குமாரிடம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.


  
   இந்த நிலையில் அறம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நயன்தாராவை வைத்து அறம் 2 படத்தை கோபி நயினார் இயக்க உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.பின்னர் நடிகர் ஜெய் – ஐஸ்வர்யா ராஜேசை வைத்து தான் இயக்க உள்ள படத்திற்கு கோபி நயினார் பணிகளை துவங்கியுள்ளார். இந்த நிலையில் தான் கோபி நயினாரும், ரஞ்சித்தும் ஒரே கதையை படமாக எடுத்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது இருவருமே உண்மைக் கதையை படமாக எடுப்பதாகவும் அந்த கதை இரண்டுமே ஒன்று என்றும் தகவல் வெளியாகி பிரச்சனை வெடித்துள்ளது.
   

அதாவது பீகாரில் வாழ்ந்த மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரரும் சமூக காவலருமான பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்தே ரஞ்சித்தும் – கோபி நயினாரும் படம் எடுக்க முடிவு செய்துள்ளனர. பிர்சா முண்டா 19ம் நூற்றாண்டில் அப்போதைய பீகாரில் வாழ்ந்தவர் ஆவார். பழங்குடியின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த இவர் தனது 25வது வயதுக்கு உள்ளாகவே மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார்.

   பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக பிர்சா முண்டா முன்னெடுத்த இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிர்சா முண்டாவை பார்த்து பிரிட்ஸ் ஆட்சியாளர்கள் நடுங்கிப் போய் இருந்தனர் என்று கூட சொல்வது உண்டு. வரலாற்றில் மிகப்பெரிய வீரராக வர்ணிக்கப்படும் பிர்சா முண்டா பெயர் தற்போதைய ஜார்கண்டில் ஏராளமான திட்டங்களுக்கும், அமைப்புகளுக்கும் சூட்டப்பட்டுள்ளன. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள விமான நிலையத்தின் பெயர் கூட பிர்சா முண்டா விமான நிலையம் தான்.
   
   சாலச்சிறந்த சுதந்திர போராட்ட வீரராக இருந்தாலும் கூட இந்தியா முழுமைக்கும் அவரது புகழ் எடுத்துச் செல்லப்படவில்லை. இதற்கு பிர்சா முண்டா பழங்குடியினத்தில் பிறந்தது தான் காரணம் என்று கூறப்படுவது உண்டு. இந்த நிலையை மாற்றி பிர்சா முண்டாவை இந்தியா அறியச் செய்யும் வகையில் இந்திப்படம் எடுக்க ரஞ்சித் முயற்சித்து வருகிறார். இதே போல் பிர்சா முண்டா மீது அளப்பறிய பாசம் கொண்ட கோபி நயினாரும் அவரது வாழ்வை படமாக்க தொடங்கியுள்ளார்.
  
   இருவருக்குமே பிர்சா முண்டா மீதான அபிப்ராயம் தான் திரைப்படத்திற்கான விதையாக இருந்தாலும், தமிழ் திரையுலகின் தலித் அடையாளம் யார் என்கிற போட்டி இருவருக்குள்ளும் நிலவுவதாக கூறப்படுகிறது. ரஞ்சித்தும் சரி, கோபியும் சரி தங்கள் திரைப்படங்களில் தலித் வாழ்வியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்த வகையில் ரஞ்சித் முன்னதாகவே படம் இயக்கியதால் தற்போது அவர் தமிழ் சினிமாவின் தலித் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.


 
   பிர்சா முண்டா திரைப்படத்தை இந்தியில் எடுத்துவிட்டால் இந்திய அளவில் தலித் இயக்குனர்களுக்கான அடையாளம் ஆகிவிடலாம் என்கிற கணக்கும் கூட ரஞ்சித்துக்கு இருக்கலாம். இதே போல் எப்போதும் தலித் அரசியல் பேசும் கோபி நயினாரும் கூட பிர்சா முண்டா வாழ்வை திரைப்படமாக எடுத்து தானும் தலித்துகளின் அடையாளம் தான் என்று முத்திரை பதிக்க விரும்பலாம். இருவருக்குள்ளும் இருக்கும் இந்த எண்ணம் தான் தற்போதைய பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
  
   பிர்சா முண்டா வாழ்வை இந்தியில் எடுக்க உள்ளதால் ரஞ்சித் அந்த படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கி முடித்து வெளியிட 2 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் கோபி நயினாரே தமிழில் மட்டுமே எடுக்கிறார் என்பதால் அடுத்த ஆண்டே கூட படம் வெளியாகலாம். இதனால் இரண்டு தலித் இயக்குனர்கள் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

click me!