சீமான் என்ற ஒரு தனி நபர் தமிழினத்திற்கே ஆபத்து.. நாம் தமிழரை கிழித்து தொங்கவிட்ட சுப. உதயகுமார்.

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 1:35 PM IST
Highlights

‘பார்ப்பனீய பாசிசம்’ தமிழ் மண்ணில் காலூன்ற பகீரத பிரயத்தனங்கள் செய்துகொண்டிருக்கும்போது, அம்மாதிரியான அடிமை வாழ்வுக்கு நம்மை அணியமாக்கும் கங்காணி வேலையை இவர்களின் ‘சீமான் பாசிசம்’ செவ்வனே செய்துகொடுக்கும். இவர்களின் பாசிசத் திட்டங்களை, செயல்பாடுகளை முளையிலேயேக் கிள்ளி எறியாமல் விட்டால், நாம் பெரும் வேதனைக்குள்ளாக நேரிடும். 

சீமானின் ஆபத்தான அரசியலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமார் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

எனக்கும் திரு. சீமான் அவர்களுக்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, சொத்துத் தகராறுகளோ, போட்டிப் பொறாமையோ, தனிப்பட்டப் பகைமையோ எதுவும் கிடையாது. எனக்கு முதல்வர் கனவோ, அரசியல் அதிகார ஆசைகளோ இல்லவே இல்லை; எனவே நான் அவரை ஒரு போட்டியாளராகப் பார்க்கவில்லை. அவரது அரசியல் வளர்ச்சி, மோடி அளவிலானத் தொடர்புகள், ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புக்கள் போன்ற சாதனைகள் பற்றியெல்லாம் நான் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. எனக்கும் ‘நாம் தமிழர்’ கட்சியில் உள்ள பக்குவமும், முதிர்ச்சியும் கொண்ட தோழர்களுக்கும் எந்தப் பகையுமில்லை, துவேசமுமில்லை. அவர்களை நான் எங்கள் கட்சிக்கு இழுக்கவுமில்லை; அவர்களும் எங்களோடு வரவேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கவுமில்லை. 

என்னுடைய, என்னோடு நின்று போராடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடுத் தொடர்புடைய ஒரு பிரச்சினையில், ஓர் அரசியல் தலைவர் எங்களுக்குச் சாதகமான ஒரு முடிவை அறிவித்ததற்கு, வெறுமனே நன்றி தெரிவிப்பதைக்கூட எதிர்க்கும், பிரச்சினையாக்கும் சர்வாதிகார மனப்பான்மையை, ஆணவப் போக்கை, எதேச்சாதிகார அரசியலை என்னால் தட்டிக்கேட்காமல் இருக்க முடியாது. தொடக்கத்தில் என்னைப் போலவே ‘தமிழ்த் தேசியம்’ பேசுகிறார்கள், அதை வளர்க்கப் பாடுபடுகிறார்கள் என்கிற அளவில் ‘நாம் தமிழர்’ கட்சியினர் மீதும், அவர்களின் தலைவர் மீதும் அன்பும், மரியாதையும் வைத்திருந்தேன். நாளடைவில் ‘நாம் தமிழர்’ ஒரு கட்சியல்ல, அது ஒரு சினிமா ரசிகர் மன்றம், இன்னும் சொல்லப்போனால், சிந்தனைக்கே இடமில்லாத ஒரு வழிபாட்டுக் கூட்டம் (cult) என்பது புரிந்தது. அந்த பஜனை மடத்தில் ஓர் ஆழமான உளவியல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

தலைவர் தன்னை தமிழ்ச் சமூகத்தின் ஆகப் பெருந்தலைவராக, வரலாற்று நாயகராக, அப்பழுக்கற்ற ஆளுமையாக, அதீதத் திறமைகள் கொண்டவராக, அற்புத ஆளுமையாகப் பார்ப்பதும், பார்த்து வியப்பதும், வியந்துப் போற்றிக் கொள்வதும் புரிந்தது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மை, நேர்மை, அர்ப்பணிப்பு, ஆற்றல், தனிமனித ஒழுக்கம், தியாகம் போன்ற பல்வேறு சிறப்புக்களைப் பற்றியெல்லாம் மனங்கொள்ளாமல், தன்னை அவரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு, (ஆனால் அப்படி வெளியேச் சொல்வதற்கு அஞ்சி) தன்னை அவருக்கு இணையானவராக நிறுவிக்கொள்ளும் உளவியலை உற்று நோக்கினேன். தேசியத் தலைவரின் அன்பிற்குரியவராக, நம்பிக்கைக்குரியவராக, நெஞ்சுக்கு நெருக்கமானவராக, அவரின் விசேடக் கவனிப்புக்குரியவராக தன்னைக் காட்டிக்கொள்வதன் மூலம், தனது தொண்டர்களை அப்படியே நம்பவைக்கும் சூட்சுமத்தைக் கண்டுணர்ந்தேன். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போன்ற மனநிலைதான் இதுவென்றாலும், அப்பாவித் தம்பிகள் “ஆகா பார், குட்டிப் புலி” என்று குதூகலித்ததையும் பார்த்துக் கவலையுற்றேன். 

‘தமிழ்த் தேசியம்’ என்கிற விழுமியம் தன்னுடையக் கண்டுபிடிப்பு என்பதுபோல நம்பிக்கொண்டு, அதனுடைய காப்புரிமை தங்களுக்கே உரியது, வேறு யாரும் எந்த வகையிலும் அதன்மீது உரிமை கொண்டாடிவிடக்கூடாது என்று இயங்கியது வேடிக்கையாக இருந்தது. ஆயுதப் போராட்டக்கள உத்தி போல, சனநாயகத் தளத்திலும் ‘தமிழ்த் தேசியம்’ பேசும் பிற கட்சிகள், இயக்கங்களை, அவற்றின் ஆளுமைகளை அழித்தொழிக்க முயலும் அவலத்தைக் கண்ணுற்றேன். எனவேதான் ‘நான் தலை--நீ வால்’ என்றெல்லாம் தலைவர் சினிமா வசனம் பேசுகிறார் என்பது புரிந்தது.

தன்னை ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிற தலைவர், எந்தவிதமான கருத்துப்பரிமாற்றத்துக்கும் இடமளிப்பதில்லை. அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டால், தொண்டராகத் தொடரலாம், அல்லது தொடர்பைத் துண்டித்துவிடுவார் என்பது தெளிவாயிற்று. தலைவருக்கு மட்டுமல்ல, பெரும்பாலான கட்சித் தொண்டர்களுக்கும் சனநாயகம் அறவேப் பிடிக்காது என்பது புரிந்தது. ஒரு ரசிக/வழிபாட்டு/அடிமை மனோபாவத்துக்கு பழக்கப்பட்டுவிட்டத் தொண்டர்களும் சுயமாக சிந்திக்கவோ, செயல்படவோ விரும்புவதில்லை. அவர்களிடம் எந்த கேள்வி கேட்டாலும், எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும், அவர்களின் பதில் உங்களை வசைபாடுவது, அவதூறுப் பேசுவது, அசிங்கம் பண்ணுவதாகத்தான் இருக்கும். 

இந்த உளவியல் சிக்கலுக்குள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் சிக்கவைக்க முயலும்போதுதான், நமக்கு பிரச்சினை எழுகிறது. இந்த குருவும், சீடர்களும் ஏதோ ஒரு மடத்தில் வாழ்ந்துகொண்டிருந்தால், நாம் இவர்களைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, நம்முடைய அடுத்தடுத்தத் தலைமுறைகளின் வருங்காலத்தை வகுக்க முயலும்போது, நாம் வாளாவிருக்க முடியாது, கூடாது. இப்போதே இவர்களுடைய “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார” சித்தாந்தத்தை, (படுக்கையறைகள் தவிர்த்த) ஒட்டுமொத்த தமிழ் நாட்டையும் கண்கொத்திப் பாம்பாய் வேவுபார்க்கும் ஆசையை, இரண்டடி முதல் ஆறடி வரை உயரம் கொண்ட இருநூறு காவலர்கள் உங்களைச் சூழ்ந்து காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று ‘கவனிக்கும்’ செயல்பாட்டை, “பச்சை மட்டையால் தோலை உரிக்கும்” செயல்திட்டத்தை எல்லாம் கேள்வி கேட்காமல் விட்டால், நாம் மாபெரும் அரசியல் தவறு செய்தவர்களாக ஆகிப்போவோம். 

இம்மாதிரியான விழுமியங்கள், ஆசைகள், கனவுகள், திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாம் மேடைக்கு எதிரே அமர்ந்து விசிலடிக்கும் தனது ரசிகர்களை, சீடர்களை மனம் மகிழச்செய்யும் வெற்றுப் பேச்சுக்கள் அல்ல. ஒருவரின் ஆழ்மனது எந்த மாதிரியான அதிகாரத்துக்காக ஏங்கித் தவிக்கிறது, எப்படி கொடும் வன்முறையில் தோய்ந்து கிடக்கிறது, எவ்வளவு படுபாதக வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பவற்றை நாம் அவதானிக்க வேண்டும்.தன்னுடைய பாழும் பாசிசக் கனவை தொடர்ச்சியாக தொண்டர்களோடுப் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இப்படியே சிந்திக்கத் துவங்குகிறார்கள். மாற்றுக்கருத்துச் சொல்வோரை அசிங்கமாகத் திட்டுகிறார்கள், வன்மத்தோடு மிரட்டுகிறார்கள்.

ஒருவேளை அரசியல் அதிகாரம் இவர்களின் கைகளில் எப்போதாவது சிக்கினால், நாம் சந்திப்பது மிகப்பெரிய ரத்தக்களரியாகவே இருக்கும். அங்கே மனித உரிமைகளுக்கோ, கண்ணியத்துக்கோ, சகவாழ்வுக்கோ இடமே இருக்காது. தலைவரும், சில  தொண்டர்களும் விரும்பி மேற்கோள் காட்டும் கொலைபாதகன் ஹிட்லர் போல, அவனது கொடூரமான நாசிப்படை போல, ஒரு நாசகார சக்தியாகவே இவர்கள் வலம் வருவார்கள். 

‘பார்ப்பனீய பாசிசம்’ தமிழ் மண்ணில் காலூன்ற பகீரத பிரயத்தனங்கள் செய்துகொண்டிருக்கும்போது, அம்மாதிரியான அடிமை வாழ்வுக்கு நம்மை அணியமாக்கும் கங்காணி வேலையை இவர்களின் ‘சீமான் பாசிசம்’ செவ்வனே செய்துகொடுக்கும். இவர்களின் பாசிசத் திட்டங்களை, செயல்பாடுகளை முளையிலேயேக் கிள்ளி எறியாமல் விட்டால், நாம் பெரும் வேதனைக்குள்ளாக நேரிடும். 

ஒரு தனி நபரின் அதிகார வெறிக்கு, குழம்பி நிற்கும் ஒரு சிறு கூட்டத்தின் அடிமைத்தனத்துக்கு உலகின் மூத்தக்குடியாம் தமிழினத்தைக் காவுகொடுக்க முடியாது, விடமாட்டோம். தேசிய இனச் சமூக மாற்றுக் கொள்கைகளோடு, மரபுசார்ந்த மக்கள் அமைப்புக்களோடு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அரசோச்சிக் கொண்டிருக்கும் தமிழர் அறம் சார்ந்த அரசியலை, வாழ்வியலை முன்னெடுப்போம். வணக்கம். இவ்வாறு அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!