
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சைலண்டாக சர்வே நடத்துவது நெடுங்கால வாடிக்கை. இதற்காக மக்கள் மனதை அறிந்து கொள்ள சர்வே படிவத்தை தூக்கிக் கொண்டு நாயாக அலைந்த கதையெல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் அலுங்காமல் ஆன்லைனில் சர்வே நடத்தி, அதிரிபுதிரியாக ரிசல்டை தட்டுவது வழக்கமாகி விட்டது. இந்த வேலைகளை அரசியல் கட்சிகளுக்கு கன்சல்டண்டாக செயல்படும் சில நிறுவனங்களே துல்லியமாக செய்கின்றன. இப்படியான கன்சல்டண்ட் நிறுவனங்கள் பெருகிக் கிடக்கின்றன நாட்டில்.
இந்த நிலையில் தினகரன், எடப்பாடி மற்றும் பன்னீர் ஆகியோர் சார்பாக குறுகிய காலத்தில் தனித்தனியே ஆன்லைன் சர்வே எடுத்துப் பார்த்துள்ளனர். இதில் ஐந்தில் மூன்று சர்வேக்களின் ரிசல்ட்டானது தினகரனை தூக்கிப் பிடிக்கும் விதத்திலேயே வந்துள்ளது. குறிப்பாக மும்பையை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் மொத்தம் எட்டு சர்வேக்களை நடத்தியிருக்கின்றன.
இவற்றில் ஆறு சர்வேக்களில் தினகரனுக்கே ஆதரவான நிலைப்பாட்டை மக்கள் எடுத்து நிற்பது புலனாகியிருக்கிறது. இதில் வாக்களித்தவர்களின் வயதை பார்க்கும்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்தான் முதல் முறை வாக்களிக்கப் போகும் 18 வயதை நெருங்குபவர்களில் துவங்கி 55 வயதிலானவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த எட்டு சர்வேக்களில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி சர்வேக்கள் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பற்றிய கேள்விகளை வைத்திருந்தனவாம். அதில் ஆட்சிக்கு எதிர்ப்பாக வாக்குகள் வந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் ஆட்சியை காப்பாற்றுவதே மோடி அரசுதான்! என்று சொல்லி காண்டாகி கடுப்பேறியிருக்கிறார்கள். பழனி - பன்னீர் இணைந்த ஆட்சிக்கு ‘மைனாரிட்டி அரசு’ என்ற ஆப்ஷனையே பலர் தேர்வு செய்திருக்கிறார்கள்.
தினகருக்கு இணையாக சில சர்வேக்களிலும், அவரை விச சின்ன வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திலும் ஸ்டாலின் இருக்கிறாராம்.
இந்த ஆன்லைன் சர்வேக்களின் முடிவுகள் அவற்றை நடத்தச் சொன்ன நபர்களுக்கு சப்தமில்லாமல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் மும்பை பேஸ்டு கம்பெனிகள் இந்த சர்வேக்களை செய்தபடியால் அதன் ரிசல்டுகள் டெல்லியில் லீக் ஆகி அலசப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் மோடி அரசு மீது மக்கள் கடுப்பாக இருப்பதை புரிந்திருப்பதோடு, தினகரனுக்கு வெகுவான ஆதரவு பெருகி நிற்பதையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அறிந்திருக்கிறார்கள். கூடவே மோடிக்கு சரியான டஃப் கொடுக்கும் நபர் தினகரன் தான் என்பதும் அவர்கள் மத்தியில் அலசப்பட்டிருக்கிறது.
எனவே இன்னும் சில மாதங்களில் மெதுவாக பழனி - பன்னீர் அணியை உதறிவிட்டு தினகரன் பக்கம் சாயப்போகும் கூட்டம் அ.தி.மு.க.வின் எம்.பி.க்களின் கூட்டம்தான் என்று உறுதியான தகவல் வருகிறது. இப்போது நகர்ந்தால் கடுப்பில் பழனியும், பன்னீரும் இணைந்து பதவிக்கு வேட்டு வைத்துவிடுவார்கள் என்று சிந்திக்கிறார்கள்.
மத்திய அரசின் ஆயுள் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படி முகாம் மாறலாம் என்பது இவர்களின் கணக்கு. தேர்தல் நெருக்கத்தில் இப்படி செய்தால் தங்களை பதவியிலிருந்து விலக்கவோ அல்லது கட்சியிலிருந்து கட்டம் கட்டவோ கட்சி தலைமை தயங்கும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
எம்.பி.க்களின் கூட்டம் முதலில் நகர அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் வேலி தாண்டினால், ஆட்சியின் நிலைமை என்னாகும்? என்பதே பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் இப்போதைய கவலை.