
பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். அதை தவிர்த்து அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதிலளிக்கவும் அரசியல் ரீதியான கருத்துகளையும் தவிர்த்து வருகிறார்.
மாநில பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவது, நீட் தேர்வு பயிற்சி மையங்களை நிறுவதல், பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குதல் என பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுடன் இணைந்து படு பிசியாக செயல்பட்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
ஊடக பேட்டிகளில் கூட, அவரது துறை சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசுகிறார். அதுதவிர்த்து அரசியல் ரீதியான கருத்துகளை தவிர்த்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. எனவே தனியார் பள்ளியை நோக்கி படையெடுப்பவர்கள் விரைவில் அரசு பள்ளியை நோக்கி வருவர் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதன்பின்னர் அவரிடம் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மறுப்பு தெரிவித்த செங்கோட்டையன், அதற்கு முதல்வர் பதிலளிப்பார் என்று தெரிவித்துவிட்டார்.
இது, தனது துறை சார்ந்த கருத்துகளை மட்டுமே பேசவேண்டும் என்பதில் செங்கோட்டையன் உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.