மாத்திரை குப்பிக்குள் மருந்தே இருக்காது... மக்களின் உயிரோடு விளையாடும் பயங்கர கேடுகெட்ட செயல்..!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2021, 5:40 PM IST
Highlights

மக்களின் உயிரைப் பணயமாக வைத்து இதுபோல் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றி அரசுக்கு இதுவரை தெரியாது என்பதை நீங்களும் நாமும் நம்பித்தான் ஆகவேண்டும். 

மருந்துக் குப்பிகளுக்குள் நம்பிக்கை துரோகங்கள் என்கிற தலைப்பில் எழுத்தாளர் சரவணன் சந்திரன் மருத்துவத்துறை எப்படி மக்களை ஏமாற்றுகிறது? கள்ளச்சந்தையில் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது என்பது குறித்து பதிவிட்டுள்ளார். 

அதில், ‘’காசநோய்க்காக தொடர்ந்து மாத்திரைகளை உட்கொள்பவர் அவர். ஒருநாள் தற்செயலாக தனக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரை கேப்சூல் ஒன்றைத் திறந்து பார்க்கிறார். அதனுள் மருந்து எதுவும் இல்லை. கேப்சூல் காலியாக இருக்கிறது. ஆடிப் போய்விட மாட்டோமா? அதே போல் முன்பெல்லாம் காய்ச்சல் எடுத்தால் மருந்தகத்தில் ஒருவேளை அல்லது இரண்டு வேளை மருந்து சாப்பிட்டாலே குணமாகிவிடும். இப்போதோ நாலைந்து நாட்களுக்குத் தொடர்ந்தால் போல சாப்பிட வேண்டியிருக்கிறது. நமது உடலில் எதிர்ப்புசக்தி குறைந்துவிட்டதோ என பதறி மருத்துவரிடம் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறோம். அவரும் அதெப்படி இது சாத்தியம் என பதறிப் போய் மேற்கொண்டு பரிசோதனைகளைச் செய்யச் சொல்வார். மருத்துவத் துறையில் இருக்கும் மருத்துவர், அவர்களை மட்டுமே நாடி நம்பி வாழும் நோயாளிகள் என இரண்டு தரப்பினர் கண்களிலும் மண்ணைத் தூவும் ஒரு போலி அல்லது தரமற்ற மருந்துச் சந்தை ஒன்று அசுர பலத்துடன் இயங்குவதை அறிவார்களா?

 

 


 
அரசல் புரசலாக தரமற்ற மருந்துகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது மருந்துச் சந்தைக்கு நிகரான பெரிய சந்தை என்பதை உணரவேண்டும். ஒட்டுமொத்த உலக மருந்துச் சந்தை மதிப்பில் 20 சதவிகிதம் போலிச் சந்தைப் பங்கு என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. வருடத்திற்கு 1 லட்சம் பேர் இதுபோன்ற தரமற்ற மருந்துகளை உட்கொள்வதால் உயிரிழப்பதாகவும் சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரப்படி இந்த இருபது சதவீத சந்தையில், 75 சதவீதம் இந்தியாவில் இருந்து தயாராகும் போலி மருந்துகள் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் நைஜீரியன் அரசு ஒரு பெரிய கப்பல் கண்டெய்னர் முழுக்க தரமற்ற போலி மருந்துகளை ஏற்றி அந்நாட்டிற்குள் நுழைந்த கப்பலைத் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அது இந்தியாவில் இருந்து வந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தயாராகி அப்படியே வெளிநாடுவாழ் மக்களின் தேவைகளுக்காக இவை ஏற்றுமதி மட்டுமே செய்யப்படுகின்றன என்று நம்பிக் கொண்டிருந்தால், நம்மைப் போல ஏமாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள். காசநோய்க்கான மாத்திரைகளை உண்ட அந்த நபர் தன்னிடமிருந்த ஐம்பது மருந்துகள் அடங்கிய அட்டையைப் பரிசோதித்த போது, அதில் 5 கேப்சூல்கள் மருந்து ஏதும் அடைக்கப்படாமல் வெறுமை யாக இருந்தன.  இந்திய மருந்துக் கட்டுப்பாடு அமைப்பின் கடந்த வருட ஆய்வின் போது பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட மருந்துகளில் 180 வகைகள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, இந்தப் போலிச் சந்தை சாம்ராஜ்ஜியம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாக இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். மருந்தில் அதென்ன போலி? அதென்ன தரமற்றவை? என்று நீங்கள் கேட்பீர்களானால், அதுபற்றியும் சொல்லியாக வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒரு மருந்தின் வீரியம் என்பது 100 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், அது வெயில் பட்டோ, காற்று பட்டோ ஒரு பத்துசதவீத வீரியம் குறையலாம் என்கின்றனர். ஆனால் அதே மருந்தின் வீரியமே 40 சதவிகிதம்தான் என்னும் போதுதான் அது போலி மருந்தாகவோ தரமற்ற மருந்தாகவோ மாறிப் போகிறது.. காய்ச்சல் குறையாமல் இருக்கிறது. அதனாலென்ன என்று கேள்வி கேட்க முடியாது. ஏனெனின் பல மருந்துகள் கரையாமல் நம் கல்லீரலை பதம் பார்த்துவிடும் என்பதும் இதிலுள்ள இன்னொரு அச்சமூட்டும் அம்சம். இப்போது காய்ச்சல் மருந்துகளைத் தயாரிக்க உதவும் பாரசிட்டமால் என்ற வேதிப் பொருளையே எடுத்துக் கொள்வோம். கிலோ 1000 ரூபாய் பாரசிட்டமாலின் விலை என்று வைத்துக் கொண்டால், போலிச் சந்தையில் கிலோ 150 ரூபாய்க்குக்கூட அவை கிடைக்கின்றன. இது போல் சல்லிசாக தரமில்லாமல் கிடைக்கும் பல்வேறு மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவையே தரமற்ற மருந்துகள் அல்லது போலி மருந்துகள்.

பலநேரங்களில் மருந்துக் கடைக்காரர்களுக்குத் தெரியாமலும், சில நேரங்களில் தெரிந்தும் இவை நோயாளிகளுடைய வீட்டினுள் நுழைகின்றன. நம்பி உட்கொள்ளும் மருந்துகளில் இப்படி நச்சும் கலந்து வருவது நமக்குத் தெரியுமா என்ன? சென்னை பாரீஸ் பகுதியிலுள்ள புகழ்பெற்ற அந்தத் தெருவிற்குள் நீங்கள் வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் ஆர்டரைக் கையில் வைத்திருப்பவர் போல உள்நுழைந்து பாருங்கள். உள்ளூர் கம்பெனியிலிருந்து உலக கம்பெனி வரையேயான தயாரிப்புகளை இங்கேயே தயாரித்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள். உண்மையான கம்பெனி செய்யும் பேக்கிங் தொழில்நுட்பத்தை அப்படியே அச்சுஅசலாய் பிரதியெடுத்து அடித்துத் தருவார்கள். எது நிஜம் எது பொய் என்பதை நம்மால் பிரித்தரிய முடியாது. 
நாம் எதிர்பார்க்கிற விலையை மட்டும் சொன்னால் போதும், அதற்குத் தகுந்த தரத்தில் மருந்துகளை போலியாக உற்பத்தி செய்து தர தயாராகவே இருப்பார்கள்.

மக்களின் உயிரைப் பணயமாக வைத்து இதுபோல் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றி அரசுக்கு இதுவரை தெரியாது என்பதை நீங்களும் நாமும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் நம்பிக் கைதானே வாழ்வு. இது விபரீதம் என்று தெரிந்துவிட்டது. வேறு என்னதான் செய்வது? தரமான மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தரமான மருந்துக் கடைகளில் வாங்குங்கள். மருந்து அட்டைகளில் இருக்கும் தேதி மாதம் இவற்றை பரிசோதியுங்கள். அதில் சந்தேகம் இருப்பின் மருத்துவர்களிடம் சென்று காண்பியுங்கள். மருத்துவர்களுக்கும் தெரியவில்லை எனில்? நம்முடைய தலையெழுத்து அதுதான் என திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். வேறுவழியில்லை. இனி அரசுதான் இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்க்க வேண்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

click me!