
இப்படி சொல்வதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் உண்மை சுட்டாலும் கூட அதை பேசித்தானே ஆக வேண்டும்!...
ஜெயலலிதா இறப்பிற்கு பின் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் அதை சார்ந்த விஷயங்களில் அரசியல் நாகரிகம் வலுவாகவே எட்டிப்பார்க்க துவங்கிவிட்டது.
நேற்று சுயேட்சையாக மனுதாக்கல் செய்ய வந்த தினகரன், தி.மு.க.வினரை பார்த்து வணங்கிய காட்சி தமிழகத்தில் அரசியல் பாகுபாடுகள் தாண்டி பரஸ்பரம் ஒரு நட்பு குணம் தலைவர்களிடையே பொங்கி வருவதை காட்டுகிறது.
தன் கட்சி, தன் பிடிவாதம், தன் கட்டுப்பாடு! என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா. வட இந்தியாவில் காங்கிரஸும், பி.ஜே.பி.யும் என்னதான் அரசியல் ரீதியாக வெட்டிக் கொண்டு நின்றாலும் கூட, பொதுவான இடங்களில் கை குலுக்கி அன்பு காட்ட தவறியதில்லை.
ஆனால் இந்த போக்கை மிக வலுவாக நிராகரித்தார் ஜெ., தி.மு.க.வை இதில் குற்றம் சொல்லிட முடியாது. பல வருடங்களுக்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வெள்ள நிவாரண நிதியை தி.மு.க. சார்பாக ஸ்டாலின் நேரில் சென்று அளித்தார். அப்போது தமிழக அரசியலரங்கில் மிக ஆச்சரியமாக அது பார்க்கப்பட்டது.
அதேபோல் 2016 தேர்தலில் ஜெ., பதவியேற்றபோது அவமதிப்புகளுக்கு இடையிலும் பல வரிசைகள் தாண்டி அமர்ந்து எதிர்கட்சி தலைவர் எனும் கடமையை ஆற்றினார். ஜெ., அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது அவரை காண சென்றார். ஜெ.,வின் பூத உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தவும் செய்தார்.
ஸ்டாலின் காட்டிய அரசியல் நாகரிகத்தை தான் வாழ்ந்தபோது ஜெ., ஒரு போதும் நல்ல நோக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, அதே பண்பை திருப்பிக் காட்டவுமில்லை என்பார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தி.மு.க.விடம் கொஞ்சம் நட்பு முகம் காட்டினாலும் தனக்கு மிகப்பெரிய நன்மை நடக்கும் என்று தெரிந்தும் கூட தன் பிடிவாதத்தை கடைசிவரை விட்டுத் தரவில்லை ஜெயலலிதா.
இதே குணம் சசியிடம் துவக்கத்தில் இருந்தது. ஜெ., மறைவுக்குப் பின் முதல்வர் பதவியிலிருந்து பன்னீரை தூக்கி எறிய அவர் சொன்ன மிக முக்கிய காரணம், சட்டசபையில் ஸ்டாலினை பார்த்து சிரித்தார்! என்பதுதான்.
ஆனால் அதே சசி சிறை சென்ற பின், தினகரன் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட சசி அண்ட்கோவின் குணம் மாறியது. மோடி கோபாலபுரம் சென்றதை ஜெயா நியூஸில் தங்களது அரசியல் செளகரியத்துக்காக காட்டினார்கள், துரைமுருகனை பேட்டி கண்டார்கள். ஆக சூழலுக்கு ஏற்று கொள்கை, சித்தாந்தம் என்று மாறிக்கொள்கிறது சசி டீம்.
இந்த சூழலில் நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்தார் தினகரன்.
அப்போது மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ். அவர்களை பார்த்ததும் தினகரன் கையெடுத்து கும்பிட, அவர்களும் பதிலுக்கு வணங்கினர். இது அங்கே சுற்றி நின்ற நபர்களை ஆச்சரியப்படுத்தியது.
ஆதாயத்திற்காக செய்தாரோ அல்லது இயல்பாகவே அவரது குணம் அப்படி அமைகிறதோ! தினகரன் செய்த செயல் நிச்சயம் அரசியலுக்கு ஆரோக்கியமானதே. வடக்கில் வாழும் இந்த அரசியல் நாகரிகம், தெற்கில் தேய்ந்து கிடந்தது, இனி அது மெல்ல மெல்ல ஆரோக்கியம் பெரும் என நம்புவோமாக!