
டிடிவி தினகரன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர் என்றும் எனவே அவரது கேள்விக்கெல்லாம் பதிலளிக்க முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக வேட்பாளராக அவைத்தலைவர் மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் மருதுகணேஷும் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
இதுவரை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக 30 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மதுசூதனன் இரட்டை இலை சின்னத்திலும் மருதுகணேஷ் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ஆனால் டிடிவி தினகரன் தொப்பி சின்னம் கேட்டும் இன்னும் இழுக்கடிக்கப்பட்டு வருகின்றது.
காரணம் அதே தொப்பி சின்னத்திற்கு சுயேட்சைகள் 3 பேர் கோரியுள்ளனர். அதனால் தொப்பி சின்னத்தை யாருக்கு வழங்குவது என தேர்தல் ஆணையம் குழம்பியுள்ளது.
டிடிவி தினகரன் கடந்த முறை எடப்பாடி அணியுடன் இருந்தபோது தொப்பி சின்னத்தை வைத்துதான் பெரும்பாலான பிரச்சாரங்கள் நடைபெற்றன. ஆனால் தற்போது அந்த சின்னத்தையும் டிடிவி பெறக்கூடாது என ஒபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முட்டுக்கட்டை போடுவதாக டிடிவி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது எனவும் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
அப்போது, டிடிவி தினகரன் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றாரே, அதுபற்றி உங்களுடைய கருத்து என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி, டிடிவி தினகரன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர் என்றும் எனவே அவரது கேள்விக்கெல்லாம் பதிலளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.