எல்லாம் எடப்பாடியார் போட்டு வைத்த பாதை..! ஆனால்..? புலம்பும் அதிகாரிகள்..!

By Selva KathirFirst Published Jun 3, 2021, 11:04 AM IST
Highlights

எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பிளஸ் 2 தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் எல்லாம் அறிவித்தார். இதனால் அந்த ஒரே ஒரு தேர்வை நடத்த முடியாத சூழல் உருவானது. இதே போல் கொரோனா குறைய ஆரம்பித்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களை அழைத்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கேட்டார். அதன் அடிப்படையில் மேல்நிலை வகுப்புகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது முதல் தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு வரை கடந்த முறை எடப்பாடி பழனிசாமி பின்பற்றிய அதே பாணியை தற்போதைய திமுக அரசு பின்பற்றி வரும் நிலையில் ஒரு சில அதிகாரிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி உத்தரவின் பேரில் மத்திய அரசு இந்த ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. அதன் பிறகு மத்திய அரசு தளர்வுகளை அறிவிக்க ஆரம்பித்த போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதனை அப்படியே பின்பற்றவில்லை. மாறாக தமிழக அரசுக்கு கொரோனா தொற்றில் இருந்து மீளும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை வழங்க மருத்துவ நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவுடன் வாரம் ஒரு முறை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அந்த குழுவுடன் ஆலோசனை அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை என பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகே கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க ஆரம்பித்தார் எடப்பாடி பழனிசாமி. உதாரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கான இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அதனை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ரத்து செய்யவில்லை. இதே போல் நோய் பரவல் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை துளி அளவு கூட தளர்த்தாமல் கடுமை காட்டப்பட்டது.

இதனால் தான் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்தது. இதே போல் பிளஸ் 2 பொதுத் தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒரே ஒரு தேர்வு மட்டுமே மீதம் இருந்தது. அந்த தேர்வை எப்படியாவது நடத்திவிடுவது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது என்பதால் பிளஸ் 2வில் எஞ்சிய தேர்வுகள் நடத்தப்படும் என்று செங்கோட்டையன் உறுதியாக கூறினார்.

ஆனால் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் பிளஸ் 2 தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் எல்லாம் அறிவித்தார். இதனால் அந்த ஒரே ஒரு தேர்வை நடத்த முடியாத சூழல் உருவானது. இதே போல் கொரோனா குறைய ஆரம்பித்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களை அழைத்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கேட்டார். அதன் அடிப்படையில் மேல்நிலை வகுப்புகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தான் நீடிப்பதாக புலம்புகிறார்கள் அதிகாரிகள். கடந்த முறை கொரோனா பரவல் ஒரு நாள் அதிகபட்சமே வெறும் 7000க்குள் தான். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் 37ஆயிரத்தை நெருங்கியது.

இப்படியான சூழலில் கடந்த முறை பின்பற்றப்பட்ட அதே பாணி எப்படி கைகொடுக்கும் என்று அதிகாரிகள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே கடந்த முறை எடப்பாடி பழனிசாமி பின்பற்றியதை போலவே நிபுணர் குழுவுடன் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை என அதே பாணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஊரடங்கு தொடர்பான முடிவுகளை எடுக்கிறார். இந்த நிலையில் தான் பிளஸ் 2 தேர்வு விவகாரம் வந்துள்ளது. கடந்த முறை வெறும் ஏழாயிரம் கொரோனா பாதிப்பு இருந்த போதே மாணவர்களின் உயிர் முக்கியம் என்று கூறி தேர்வை நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் தற்போது வரை தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25ஆயிரத்தை குறையவில்லை. ஆனால் பிளஸ் 2 தேர்வை நடத்தியே தீருவோம் என்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கடந்த முறை மாணவர்களின் உயிர் முக்கியம் என்று கூறிய மு.க.ஸ்டாலின், இந்த முறை அன்பில் மகேஷ் கூறிய கட்டாயம் தேர்வு நடைபெறும் என்கிற முடிவிற்கு எதுவும் பதில் அளிக்காமல் உள்ளார். இது தான் அதிகாரிகளை அதிகம் புலம்ப வைத்துள்ளது. கொரோனா சூழலில் எப்படி பிளஸ் 2 தேர்வை நடத்த முடியும்? நடத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? என்று அவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

click me!