அதிமுகவில் கட்சி ரீதியாக ஓ. பன்னீர்செல்வம் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், கட்சி அலுலவகம் எடப்பாடி பழனிச்சாமிக்குச் சென்றிருப்பது அவருக்கு இன்னும் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்கள், 20, எம்.பி.க்கள், கணிசமான பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆதரவு இருந்தது. குறிப்பாக மாவட்ட, ஒன்றிய அளவிலும் தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இருந்தது. கூடவே மத்திய அரசின் பரிபூரண ஆசியும் இருந்தது. இவ்வளவு ஆதரவு இருந்தும்கூட கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றும் வகையில் ஓபிஎஸ் நடந்துகொள்ளவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் கட்சியின் சின்னத்தைத் தேர்தல் ஆணையமே முடக்கியது. ஆனால், பின்னர் சசிகலா - டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்ததன் மூலம் இபிஎஸ்ஸுடம் கைகோர்த்தார் ஓபிஎஸ்.
மேலும் வாசிக்க: எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவி.. ஓபிஎஸ் இடத்தில் ஆர்.பி. உதயகுமார்.. எடப்பாடி பழனிச்சாமியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
ஆனால், இப்போது ஒபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எல்லாமே தலைகீழ். தொடக்கத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவாகவே இல்லை. இபிஎஸ் பக்கமே எல்லோரும் சாய்ந்தனர். ஓபிஎஸ்ஸுக்கு பின்னால் இரண்டு எம்.எல்.ஏ.க்கள், ஒரு மக்களவை எம்.பி. (அவருடைய மகன்), 4 மாவட்டச் செயலாளர்கள், சுமார் 2 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே உடன் இருக்கிறார்கள். ஓபிஎஸ்ஸால் எம்.பி. பதவி வாய்ப்பைப் பெற்ற ஆர். தர்மர்கூட அவர் பக்கம் இல்லை என்றும் இபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
மேலும் வாசிக்க: நாளைக்கே தேர்தல் வைக்கட்டும்.!திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டே விலகுகிறோம்.?செல்லூர்ராஜூ தடாலடி
பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவிக்கு வந்துவிடுவார் என்பதை அறிந்திருந்த ஓபிஎஸ், அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஜூலை 11 அன்று கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்றார். அது வன்முறையில் முடிந்ததால், கட்சி அலுவலகத்துக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சீல் வைப்பு விவகாரமே ஓபிஎஸ் தரப்பு தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் கருதின. உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்ற போது, ‘இரு தரப்புக்கும் மோதல் உள்ள நிலையில், பிரச்சனை தீரும் வரை கட்சி அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம்’ என்று ஓபிஎஸ் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தது.
ஆனால், கட்சி அலுவலக சீலை நீக்குவது தொடர்பாக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே வந்துள்ளது. கடந்த 1991இல் ஜெயலலிதா - திருநாவுக்கரசர் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சி பிளவானபோது, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு சென்று தீர்க்கப்பட்டது. எனவே, தற்போதும் இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீர்ப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில்தான் ஆழ்ந்திருக்கிறது. இதை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருக்கிறது.
மேலும் வாசிக்க: ஐ. நா. சபைக்கே போங்க.. அப்பவும் நாங்கதான் ஜெயிப்போம்.. ஓபிஎஸ் தரப்பை ஜெர்க் ஆக்கும் ஜெயக்குமார்.!
இரட்டைத் தலைமை ஒழிப்பு, கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு இல்லாதது, பொருளாளர் பதவி பறிப்பு, கட்சியிலிருந்து நீக்கம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிப்பு என்று தொடர்ந்து பெரும் பின்னடைவை ஓபிஎஸ் சந்தித்து வரும் நிலையில், தற்போது கட்சி அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் நீதிமன்றம் அளிக்க உத்தரவிட்டிருப்பது, அவருக்கான பிடி முற்றிலும் தளர்ந்துவிட்டதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.