அனல் பறக்கும் விவாதம்… மோடி தலைமையிலான அரசு என்ன செய்ய போகிறது ? குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பம்...

By Raghupati RFirst Published Nov 29, 2021, 7:58 AM IST
Highlights

வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்கவிருக்கிறது நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா, முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியுள்ளன. இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து எம்.பிக்களும் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது அந்த போராட்டம்.

கடந்த 19ம் தேதி பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும்  அவர் கூறினார். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.  பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நேற்று மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமயில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என நாங்கள் எதிர்பார்த்தோம். 

விவசாய சட்டங்கள் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்படலாம் என சில அச்சங்கள் எழுந்துள்ளதால், அது குறித்து கூடுதல் தகவல்களை கேட்க நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.  25 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு பட்டியல் தயாரித்துள்ளது. அவற்றில் 3 மசோதாக்கள், அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுபவை. போதை மருந்து தடுப்பு மசோதா, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா ஆகியவைதான் அந்த மசோதாக்கள். தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. பட்டியலை மாற்றி அமைப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதாக்கள், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்தை திருத்துவதற்கான மசோதா, திவால் சட்ட (இரண்டாவது திருத்தம்) மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா ஆகியவை இந்த மசோதாக்களில் முக்கியமானவை ஆகும்.

மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கும் இந்த கூட்டத்தொடர் ஆனது, டிசம்பர் 23-ந் தேதி வரை நடக்கிறது.இன்று தொடங்கி நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிச்சயம் ‘அனல்’ காற்று வீசும் அளவுக்கு கூட்டத்தொடர் பரபரப்புடன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!