தேர்தலுக்கு முன்பு புருடா பேச்சு.. வழக்கப்படி நாடகத்தை தொடங்கிடுச்சா திமுக.? போட்டுத் தாக்கும் டிடிவி தினகரன்!

By Asianet TamilFirst Published Nov 28, 2021, 9:53 PM IST
Highlights

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல் கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. அப்படி என்றால் உண்மை என்ன?

நீட் தேர்வை ஒழிக்க முடியாததால் தமது வழக்கப்படி திமுக நாடகமாடுகிறதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று நேற்று சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் அதுகுறித்த புகைப்படங்களும் செய்தியும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டது. நீட் விலக்குக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூக ஊடகங்களில் தமிழக முதல்வர் பக்கத்திலும் அதே தகவல்கள்தான் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார். இக்குழுவானது, நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது; மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களை தீர ஆராய்ந்தது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி அவற்றை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்தது.

குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 13 அன்று தமிழக சட்டப்பேரவையில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா' நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் வைத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலை விரைவில் பெற, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.” எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால்,. இச்சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகையும் செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்தச் செய்திக்குறிப்பில், “ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ‘மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் நீட் என்ற வார்த்தைக்கூட இடம் பெறவில்லை. தமிழக அரசு வெளியிட்ட அரசு செய்திக் குறிப்பும், ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பிலும் மாறுப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “எது உண்மை? தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல் கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. அப்படி என்றால் உண்மை என்ன?

'ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம்' என்று தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய திமுக, அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!